ஐஎன்எஸ் அரிதமன் அதன் முன்னோடிகளான ஐஎன்எஸ் அரிஹந்த் (INS Arihant) மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் (INS Arighaat) ஆகியவற்றை விட அதிகத் திறன் கொண்டது. முந்தைய கப்பல்களில் நான்கு ஏவுகணை ஏவுதளங்கள் மட்டுமே இருந்த நிலையில், அரிதமனில் எட்டு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3,500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கக்கூடிய எட்டு 'கே-4' (K-4) ரக ஏவுகணைகளை அல்லது 750 கி.மீ தூரம் வரை பாயும் 24 'கே-15' ஏவுகணைகளை ஏவும் வல்லமை இதற்கு உண்டு. இது ஆசியாவின் பெரும்பகுதியைத் தனது தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 7,000 டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், 83 மெகாவாட் திறன் கொண்ட அணு உலை மூலம் இயங்குகிறது. இதனால் பல மாதங்கள் கடலுக்கு அடியிலேயே தங்கியிருந்து எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் ரகசியமாகப் பணியாற்ற முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன சோனார் கருவிகள் மற்றும் சத்தத்தைக் குறைக்கும் தொழில்நுட்பங்கள், இதனை ஒரு "மறைந்து தாக்கும் போர் இயந்திரமாக" மாற்றியுள்ளன. சீனாவின் வளர்ந்து வரும் கடற்படை ஆதிக்கத்தைச் சமாளிக்கவும், இந்தியாவின் 'முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாத' (No First Use) கொள்கையைப் பாதுகாக்கவும் இது ஒரு முக்கியமான அரணாக விளங்கும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பலின் வருகையைத் தொடர்ந்து, 'S4*' என்று பெயரிடப்பட்டுள்ள நான்காவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் 2027-ம் ஆண்டுத் தொடக்கத்தில் கடற்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மிகப்பெரிய அளவிலான 'S5' ரக நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் பணிகளும் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள 'புராஜெக்ட் வர்ஷா' (Project Varsha) எனும் அதீத பாதுகாப்பு கொண்ட தளத்தில் இந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட உள்ளன. இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு சமநிலையை உருவாக்கும் என பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
