ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் சி90 (Beechcraft C90) ரக விமானம், ராஞ்சியில் இருந்து மாலை 7:11 மணிக்கு வானில் கிளம்பியது. சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கொல்கத்தா கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, கடும் இடி மின்னல் மற்றும் மழையின் காரணமாக விமானத்தின் பாதையை மாற்ற அனுமதி கோரியுள்ளார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பிலிருந்து விமானம் மறைந்தது. அப்போது அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை மற்றும் இடி புயலே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், நோயாளி சஞ்சய் குமார், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா, பாராமெடிக்கல் ஊழியர் சச்சின் குமார் மிஸ்ரா, அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த நோயாளி சஞ்சய் குமார், தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெறுவதற்காக சுமார் 8 லட்சம் ரூபாய் கடன் பெற்று இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்பாடு செய்திருந்ததாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர். ஒரு உயிரைக் காக்க மேற்கொண்ட பயணம் இப்படிப் பேரிடரில் முடிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து குறித்து விசாரணை நடத்த 'விமான விபத்து விசாரணை வாரியம்' (AAIB) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆகியவற்றின் சிறப்புக் குழுக்கள் இன்று மதியம் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளன. விமானத்தின் 'பிளாக் பாக்ஸ்' (Black Box) கருவியைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்ததா அல்லது வானிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியாமல் விமானம் விழுந்ததா என்பது குறித்த தெளிவான விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரியவரும். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஜார்க்கண்ட் அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
