GO BACK

நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபீஸ்ல இருப்பேன்: விஜய் ஸ்டைலில் வீடியோ வெளியிட்ட ஜூலி - வைரலாகும் பதிலடி!

(பிப்ரவரி 25, 2026): தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் வேலூர் மாநாட்டில் தமிழக அரசியல் களத்தை ஜல்லிக்கட்டுப் போட்டியுடன் ஒப்பிட்டு ஒரு குட்டிக்கதை சொல்லியிருந்தார். இந்த கதையை விமர்சித்து பிக்பாஸ் புகழ் ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், விஜய்யின் பேச்சில் எந்த தெளிவும் இல்லை என்றும், அதில் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் ஏதுமில்லை என்றும் ஜூலி வெளிப்படையாகக் கூறியிருந்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜூலியின் இந்த விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்தனர். பலரும் ஜூலியை ஆபாசமான வார்த்தைகளாலும், மிரட்டல் தொனியிலும் விமர்சித்து கமெண்ட்களைப் பதிவிட்டனர். ஜூலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் ஒரு விவாதப் போரே நடந்தது. குறிப்பாக, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலிக்கு, ஜல்லிக்கட்டு பற்றி விஜய் பேசியதை விமர்சிக்க உரிமையில்லை என ரசிகர்கள் வாதிட்டனர்.

ரசிகர்களின் இந்தத் தொடர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி இன்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கரூர் விபத்திற்குப் பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி விஜய் எந்த மாடுலேஷனில் பேசினாரோ, அதே 'ஸ்லோ மாடுலேஷனில்' ஜூலியும் பேசியுள்ளார். "விஜய் அண்ணா, உங்களுக்கு என்னை பழிவாங்கணும்னா நான் என் வீட்டில் இருப்பேன், இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனா என்னைச் சார்ந்தவங்களை விட்டுடுங்க" என்று விஜய் பேசிய அதே வசனங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் பேசிய ஜூலி, "நீங்கள் பனையூரை (விஜய் அலுவலகம்) விட்டு வெளியே வரமாட்டீர்கள். நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன், நானே பனையூர் வரட்டுமா?" என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு பெண்ணிற்கு உங்கள் ரசிகர்கள் எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவின் கமெண்ட்களைப் பார்த்தாலே தெரியும் என்றும் அவர் சாடியுள்ளார். விஜய்யின் அரசியல் பேச்சுக்களைத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஜூலியின் இந்த வீடியோ, தற்போது கோலிவுட் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.