கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவகல்யாண் பகுதியில், 22 வயதே ஆன அஞ்சனபாய் என்ற இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு சேகர் பாட்டீல் என்பவரை திருமணம் செய்துகொண்ட அஞ்சனபாய்க்கு, தற்போது 11 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், திருமணமான நான்கு ஆண்டுகளிலேயே அவர் உயிரிழந்தது இயற்கை மரணம் அல்ல என்றும், அவரது கணவர் குடும்பத்தினர் கொடுத்த அதீத அழுத்தமே காரணம் என்றும் அவரது தந்தை விஜயகுமார் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அஞ்சனபாயின் மாமியார், அவரது அழகைக் குறிப்பிட்டு அவரை சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. வீட்டு வேலைகள் மற்றும் சமையல் சரியாக செய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி தினந்தோறும் அவரை மனதளவிலும் உடலதளவிலும் துன்புறுத்தியுள்ளனர்.
மாமியாரின் இத்தகைய கீழ்த்தரமான கோரிக்கையை ஏற்க மறுத்த அஞ்சனபாயை, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது 11 மாத குழந்தையின் எதிர்காலத்தைக் கூட யோசிக்க முடியாத அளவிற்கு விரக்தியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அஞ்சனபாயின் கணவர் சேகர் பாட்டீல் உட்பட மூன்று பேரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு குடும்பத்தின் கௌரவத்தையும் ஒழுக்கத்தையும் காக்க வேண்டிய மாமியாரே, தனது மருமகளை தவறான பாதைக்கு வற்புறுத்தியது மனிதநேயமற்ற செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தாயை இழந்து தவிக்கும் அந்த 11 மாத குழந்தையின் நிலை அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
