GO BACK

Busல் வீடியோ எடுத்து வெளியிட்ட பெண்- தீபக் தற்கொலைக்கு காரணம் என சிறையில் அடைப்பு !

 

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் (42) என்ற விற்பனை மேலாளர், கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, ஜனவரி 16-ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்தபோது தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலாகி தீபக் மீது கடுமையான விமர்சனங்களும் சமூக வலைதளத் தாக்குதல்களும் நடத்தப்பட்டதால், அவர் மன உளைச்சலில் இம்முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

தீபக்கின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பேருந்து ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபக் அத்தகைய செயலில் ஈடுபடவில்லை என்றும், கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட தற்செயலான உராய்வை ஷிம்ஜிதா தவறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்டதும் தெரியவந்தது. மேலும், ஷிம்ஜிதா அந்த வீடியோவை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியது தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை வடகரை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் (பிரிவு 109 - BNS) உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஷிம்ஜிதா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்கள் வழியாக தனிநபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் 'சமூக வலைதள விசாரணை' (Social Media Trial) எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேரளா மனித உரிமைகள் ஆணையமும் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.