லண்டன் (பிப்ரவரி 21, 2026): நீங்கள் விரும்பி உண்ணும் 'சிக்கன்' உண்மையில் ஆரோக்கியமானதுதானா? பிரித்தானியாவின் முன்னணி உணவகங்களான KFC, Burger King மற்றும் Nando's உள்ளிட்ட 18 ஜாம்பவான் நிறுவனங்கள் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு, தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கோழிகளின் வளர்ப்புத் தரத்தை மேம்படுத்துவோம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களுக்கு அளித்த உறுதிமொழியை, லாபம் குறைகிறது என்ற ஒரே காரணத்திற்காக இந்த நிறுவனங்கள் தற்போது குப்பைத் தொட்டியில் வீசியுள்ளன.
குறைந்த செலவில் அதிக இறைச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக, மரபணு மாற்றப்பட்ட 'பிராங்கன் சிக்கன்' (Frankenchickens) எனும் வகைகளைத்தான் இந்த நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. இவை இயற்கைக்கு மாறாக மிக வேகமாக வளர்வதால், அவற்றின் கால்களால் உடல் எடையைத் தாங்க முடியாமல் முறிந்து போகும் அவலம் நீடிக்கிறது. இத்தகைய சித்திரவதைக்கு உள்ளாகும் கோழிகளைத் தவிர்த்து, தரமான கோழிகளைப் பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியில் (BCC) இருந்து இந்த நிறுவனங்கள் பின்வாங்கியிருப்பது அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கள் முடிவை நியாயப்படுத்த இந்த நிறுவனங்கள் ஒரு விசித்திரமான காரணத்தைக் கூறியுள்ளன. "தரமான கோழிகளை வளர்க்க அதிக இடமும் தீவனமும் தேவைப்படும், அது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும்" என்பதே இவர்களின் வாதம். ஆனால், விலங்கு நல ஆர்வலர்களோ, "சுற்றுச்சூழல் என்பது வெறும் போலிச்சாக்கு; உண்மையில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் ஆரோக்கியத்தையும் விலங்குகளின் நலனையும் இவர்கள் அடகு வைக்கிறார்கள்" எனச் சாடி வருகின்றனர்.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் #BoycottKFC போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. "நாங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவது வெறும் இறைச்சியை அல்ல, தரமான உணவை; அதில் சமரசம் செய்வதை ஏற்க முடியாது" என நுகர்வோர் கொந்தளித்து வருகின்றனர். பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தரக் குறைப்பு விவகாரம், இந்திய உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் இத்தகைய நிறுவனங்கள் பின்பற்றும் தரம் குறித்த பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
