2022-ல் ரஷ்யா அறிவித்த பகுதிநேரத் திரட்டல் (Mobilization) நாடு முழுவதும் பெரும் போராட்டங்களையும், லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் வழிவகுத்தது. மீண்டும் அத்தகைய மக்கள் கொந்தளிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த முறை "மெதுவான மற்றும் மறைமுகமான" முறையை புடின் கையாண்டு வருகிறார். இதற்காக ரஷ்ய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, நாட்டைப் பாதுகாக்க மறுப்பவர்கள் அல்லது ராணுவத் திரட்டலை விமர்சிப்பவர்கள் மீது கடுமையான தேசத்துரோக வழக்குகளைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கட்டாய ஆள்சேர்ப்புக்குப் பயந்து தப்ப நினைப்பவர்களை முடக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை ரஷ்யா அதிக பணம் கொடுத்து தன்னார்வ வீரர்களைத் திரட்டி வந்தது. சில பிராந்தியங்களில் ராணுவத்தில் சேர 4 மில்லியன் ரூபிள்களுக்கும் மேல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டும், போதிய வீரர்கள் கிடைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் இந்த "பணம் கொடுத்து ஆள் சேர்க்கும்" முறை தற்போது தோல்வியடைந்து வருவதால், வேறு வழியின்றி 20 லட்சம் வீரர்களைக் கொண்ட தனது 'ரிசர்வ்' படையில் இருந்து ஆட்களை இழுக்க கிரெம்ளின் முடிவு செய்துள்ளது. அதேசமயம், போர்க்களத்திற்கு அதிக வீரர்களை அனுப்பினால், நாட்டின் தொழிற்சாலைகளில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரம் சரியும் என்ற அச்சமும் புடின் நிர்வாகத்திற்கு உள்ளது.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் நவீன போர் உத்திகளால் ரஷ்ய வீரர்களின் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 35,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உளவுத்துறைத் தகவல்கள் கூறுகின்றன. இது நேட்டோ அமைப்பின் சராசரி கணிப்பை விட இருமடங்கு அதிகமாகும். இந்த இழப்புகளை ஈடுகட்ட முடியாமல் ரஷ்ய ராணுவத்தின் வேகம் குறைந்து வரும் நிலையில், புதிய வீரர்களைக் கட்டாயமாகப் போர்க்களத்திற்கு அனுப்புவதே புடினுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இது ரஷ்யாவிற்குள் மீண்டும் ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
