மனித வரலாற்றையே திருத்தி எழுத வைத்துள்ளது இந்தக் குகை Oregon Caves - இங்கே வாழ்ந்த Paleo-Indians.

இதுவரை காலம் நாகரிகம் என்று பேசினால், பெரும்பாலும் எகிப்திய நாகரிகம் பற்றித்தான் பேசுவார்கள். அது சுமார் 4,600 ஆண்டுகள் பழமையானது. சிந்துவெளி நாகரிகம் பற்றிப் பேசினால், அதுவும் சுமார் 2,700 ஆண்டுகள் பழமையானது. ஆனால் இவை அனைத்தையும் காட்டிலும் சுமார் 12,000 ஆண்டுகள் பழமையான ஒரு நாகரிகத்தை, அமெரிக்காவில் உள்ள Oregon குகை ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்கள்.

இங்கே வாழ்ந்த மனிதர்களை Paleo-Indians என்கிறார்கள். இதற்காக அவர்கள் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது பொருள் அல்ல. இருப்பினும், ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள் அல்லது ரஷ்யா போன்ற குளிர் பிரதேசங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. இவர்களில் ஒரு வகையினர் தான், பின்னர் 'செவ்விந்தியர்கள்' என அறியப்பட்ட அமெரிக்காவின் ஆதிக்குடிவாசிகள் ஆவர்.

இவர்கள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி ஆடைகளைத் தயாரித்துள்ளார்கள். நார்களைக் கொண்டு பின்னவும் தெரிந்து வைத்துள்ளார்கள். இதுபோக, பல வகையான ஆயுதங்களையும் வேட்டையாடத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும் சொல்லப்போனால், இவர்கள் மிருகங்களைப் பொறி வைத்துப் பிடிக்கக் கருவிகளைக் கண்டுபிடித்திருந்த விஷயம்தான், மனித வரலாற்றையே மாற்றி எழுத வைத்திருக்கிறது. ஏனெனில் ஆரம்பகால மனிதர்கள் வேட்டையாடித் தமது பசியை மட்டும் போக்கினால் போதும் என்று வாழ்ந்தவர்கள். ஆனால், இவர்கள் வேட்டையாடுவதைத் தாண்டி பல கலைகளையும் கற்று வைத்திருந்தார்கள் என்பதுதான் தற்போது அதிசயமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் ஓரிகான் (Oregon) மாகாணத்தில் உள்ள ஒரு வறண்ட குகையில், சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய தைக்கப்பட்ட உடைகள் மற்றும் காலணிகளின் பாகங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது புகழ்பெற்ற எகிப்து பிரமிடுகள் கட்டப்படுவதற்கு சுமார் 7,500 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி கண்டுபிடிப்பு, ஆரம்பகால மனிதர்கள் குறித்த வரலாற்றையே தற்போது மாற்றி எழுதியுள்ளது.

நெவாடா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ரிச்சர்ட் ரோசன்கிரான்ஸ் (Richard Rosencrance) தலைமையிலான குழுவினர், ஓரிகானின் வடக்கு கிரேட் பேசின் (Great Basin) பகுதியில் உள்ள குகைகளில் 55-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களைக் கண்டெடுத்தனர். வழக்கமாக அழுகிப்போகக்கூடிய விலங்குகளின் தோல்கள் மற்றும் தாவர நார்கள், இந்த குகைகளின் வறண்ட தன்மையால் பல்லாயிரம் ஆண்டுகளாக சிதையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை, பனிக்காலத்தின் (Ice Age) இறுதியில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டையாடுபவர்களாக மட்டுமே இருந்தனர் என்று நம்பப்பட்டது. ஆனால், இந்த கண்டுபிடிப்பு அவர்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்கிறது. விலங்குகளின் தோல்களைத் தைத்து உடைகளாகவும், காலணிகளாகவும் மாற்றியதோடு, சிக்கலான கூடைகளை நெய்யவும், மரங்களால் ஆன வேட்டைப் பொறிகளை உருவாக்கவும் அவர்கள் தெரிந்திருந்தனர் என்பது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு மனிதகுலத்தின் அறிவாற்றல் மற்றும் தகவமைப்புத் திறனுக்கு ஒரு மாபெரும் சான்றாகும். எகிப்திய நாகரிகம் மற்றும் மெசபடோமியா போன்ற உலகப் புகழ்பெற்ற நாகரிகங்கள் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வட அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள் இவ்வளவு முன்னேறிய நிலையில் இருந்தது வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. "பழமையானது எது?" என்ற கேள்விக்கு ஓரிகான் குகைகள் இப்போது ஒரு புதிய பதிலை அளித்துள்ளன.


Source : https://www.dailymail.co.uk/sciencetech/article-15551491/Prehistoric-discovery-Oregon-cave-Egypt-Pyramid.html

Previous Post Next Post

Contact Form