ரஷ்யா தனது அணு ஆயுதக் கொள்கையை (Nuclear Doctrine) ஏற்கனவே திருத்தி அமைத்துள்ள நிலையில், அணு ஆயுதம் இல்லாத ஒரு நாடு, அணு ஆயுதம் கொண்ட நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவைத் தாக்கினால், அது கூட்டுத் தாக்குதலாகக் கருதப்படும் என்று புதின் தெளிவுபடுத்தியுள்ளார். உக்ரைனுக்கு லண்டன் மற்றும் பாரிஸ் அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வழங்க முயல்வதாக ரஷ்ய உளவுத்துறை (SVR) குற்றம் சாட்டியுள்ள சூழலில், இத்தகைய நடவடிக்கைகளுக்கு 'சமச்சீர் பதிலடி' (Symmetrical Response) கொடுக்கப்படும் என மாஸ்கோ எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான 'நியூ ஸ்டார்ட்' (New START) அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியாகியுள்ள நிலையில், தனது 'அணுசக்தி முப்படையை' (Nuclear Triad) மேம்படுத்துவதே நாட்டின் முதன்மையான முன்னுரிமை என்று புதின் கூறியுள்ளார். குறிப்பாக, ஒலியை விடப் பல மடங்கு வேகமாகச் செல்லும் ஏவுகணைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும், ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் படைகளைக் குவிப்பதும் 'அணுசக்தி மோதலுக்கு' வழிவகுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
புதினை ஒரு 'புவிசார் அரசியல் தாதா' (Geopolitical Gangster) என விமர்சித்துள்ள சர்வதேசப் பாதுகாப்பு வல்லுநர்கள், அவரது அணு ஆயுத மிரட்டல்கள் ரஷ்யாவின் பலவீனத்தையே காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர். போர் ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பின்வாங்கத் தயாராக இல்லாதது பெரும் கவலையை அளிக்கிறது. இதற்கிடையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், "புதின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவிட்டார், அவரை முறியடிக்கப் பொருளாதாரத் தடைகளும் ராணுவப் பலமுமே ஒரே வழி" என்று கூறியுள்ளார்.
