புள்ளிவிவரங்களின்படி, இரண்டாம் உலகப்போரின் போது ஒட்டுமொத்த பிரித்தானியா மீதும் சுமார் 75,000 டன் வெடிபொருட்கள் வீசப்பட்டன. ஆனால், உக்ரைனில் ரஷ்யா ஒரு மாதத்திற்கு மட்டுமே சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கிளைடு பாம்களைப் பயன்படுத்துவதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் மட்டும், ரஷ்யா சுமார் 50,000-க்கும் அதிகமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது மனித வரலாற்றில் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது குறுகிய காலத்தில் நடத்திய மிக மோசமான வான்வழித் தாக்குதலாகும்.
ஹிட்லரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை விட, ரஷ்யாவின் தற்போதைய குண்டுகள் அதிக அழிவுத்திறன் கொண்டவை. ரஷ்யா தற்போது 3,000 கிலோ எடையுள்ள 'FAB-3000' போன்ற ராட்சத கிளைடு பாம்களை உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புகள் மீது வீசி வருகிறது. "இவை வெறும் குண்டுகள் அல்ல, உக்ரைனைப் பூமியிலிருந்து துடைத்தெறியும் நாசவேலை" எனச் சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா வழங்கிய 'பேட்ரியாட்' (Patriot) போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, ரஷ்யாவின் குண்டுகள் உக்ரைன் நகரங்களைச் சுடுகாடாக மாற்றி வருகின்றன.
இந்த 4 ஆண்டுகாலப் போரில் உக்ரைனின் சுமார் 80% மின்சாரக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. ஹிட்லர் காலத்தில் இங்கிலாந்து மீண்டெழுந்தது போல, உக்ரைன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பப் பல தசாப்தங்கள் ஆகும் என அஞ்சப்படுகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், ரஷ்யா தனது குண்டுவீச்சைத் தீவிரப்படுத்துவது, உக்ரைனைப் பணிய வைப்பதற்கான ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் வடுக்களை விடப் பெரிய வடுக்களை உக்ரைன் சுமக்கத் தொடங்கியுள்ளது.
