நார்வேயின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு கடற்படைத் தளத்திற்கு மிக அருகில், ரஷ்யாவின் அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்புடைய நபர்கள் மூன்று சொகுசு பங்களாக்களை வாங்கியிருப்பதை அந்நாட்டு உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இந்த வீடுகளில் இருந்து ராணுவக் கப்பல்களின் வருகையையும், நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், பின்லாந்தில் ராணுவ விமானப்படைத் தளங்களுக்கு அருகில் உள்ள நிலங்களை ரஷ்யர்கள் அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதும் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் மூலம் எலக்ட்ரானிக் கண்காணிப்பு சாதனங்களை நிறுவி, ராணுவத் தகவல் தொடர்புகளை இடைமறிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும், போர் போன்ற ஒரு பதற்றமான சூழலில், இந்த இடங்களை நாசவேலைகளுக்குப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். "எதிரி நாட்டுடன் தொடர்புடையவர்கள் நமது மூலோபாய இடங்களுக்கு அருகில் தங்குவது தேசிய பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவால்" எனப் போலந்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு நிலப்பரப்பை வெளிநாட்டினர் வாங்குவதில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் சுற்றளவில் வெளிநாட்டினர் சொத்துக்கள் வாங்கத் தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வாங்கப்பட்ட சந்தேகத்திற்குரிய சொத்துக்களைப் பறிமுதல் செய்வது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் அரசு ஆலோசித்து வருகிறது. இந்தப் புதிய 'நிழல் போர்' முறையை எதிர்கொள்ள ஐரோப்பா முழுவதும் பாதுகாப்புத் தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
