GO BACK

ரஷ்யா இலங்கையில் இருந்து வேலை ஆட்களை எடுக்கும் ரஷ்யா- 11 லட்சம் பேர் தேவை !

 

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, அந்த நாடு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பெருமளவில் பணியமர்த்தத் தொடங்கியுள்ள செய்தி தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் மற்றும் மக்கள் தொகை குறைவு காரணமாக ரஷ்யப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார்  11 லட்சம் தொழிலாளர் பற்றாக்குறையை (Labor crisis) எதிர்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாஸ்கோ தனது வழக்கமான மத்திய ஆசிய நாடுகளை விடுத்து, தெற்காசிய நாடுகளின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தொழிலாளர் இடமாற்றம் தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 2026 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 70,000 இந்தியத் தொழிலாளர்களைப் பணியமர்த்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. கடந்த 2021-ல் வெறும் 5,000 ஆக இருந்த இந்தியர்களுக்கான வேலை அனுமதி அட்டைகளின் (Work permits) எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் 56,000-க்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் பனி அகற்றுதல், கட்டுமானம், உணவகங்கள் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது தீவிரமாக வேலையில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் சுமார் 1,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 84,000 ரூபாய்) வரை ஊதியம் வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் இவர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவோடு, ரஷ்ய மொழிப் பயிற்சியும் வழங்கப்படுவது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த வேலைவாய்ப்புகளுக்குப் பின்னால் சில அபாயங்களும் மறைந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே சில இந்தியத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு போர்முனைக்கு (Front lines) அனுப்பப்பட்ட சம்பவங்கள் சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்றன. மொழிப் பிரச்சனை மற்றும் கலாச்சார மாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தவிக்கும் தெற்காசிய இளைஞர்களுக்கு ரஷ்யாவின் இந்தத் திடீர் அழைப்பு ஒரு வரப்பிரசாதமாகவும், அதே சமயம் ஒரு சவாலாகவும் பார்க்கப்படுகிறது.