நேர்காணலில் பேசிய ஒரு வீரர், "தனது தளபதி கண்முன்னேயே நான்கு வீரர்களைச் சுட்டுக் கொன்றதை நான் பார்த்தேன். அவர்கள் 'சுடாதீர்கள், நாங்கள் எதையும் செய்கிறோம்' என்று கதறியும் தளபதி இரக்கமின்றிச் செயல்பட்டார்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரவுகளை மதிக்காத வீரர்களை ஆழமான குழிகளில் தள்ளி, உணவின்றிச் சித்திரவதை செய்வதும், அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்துவதும் வழக்கமாக உள்ளதாக மற்றொரு வீரர் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூரங்கள் மூலம் வீரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்கு (Meat Storms) ரஷ்யா கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஆச்சரியமளிக்கும் விதமாக, இத்தகைய கொடூரமான உத்தரவுகளைப் பிறப்பித்த சில தளபதிகளுக்கு ரஷ்ய அரசு 'ரஷ்யாவின் நாயகன்' (Hero of Russia) போன்ற உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024-ம் ஆண்டில் உயரிய விருது பெற்ற ஒரு தளபதி, தனது சொந்த வீரர்களைக் குழிக்குள் தள்ளிப் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அதிபர் புதினுக்குக் கடிதம் எழுதியும், இதுவரை எந்த ஒரு ராணுவ நீதிமன்ற விசாரணையும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அல்லது காயமடைந்துள்ளதாகப் பிரிட்டன் பாதுகாப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 900 முதல் 1,500 வரையிலான வீரர்கள் போர்க்களத்தில் பாதிக்கப்படுகின்றனர். தற்போதைய நிலையில், உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலில் இருந்து தப்ப முயலும் வீரர்களைக் கூட ரஷ்யத் தளபதிகள் 'ட்ரோன்கள்' மூலமாகவே சுட்டுக் கொல்ல உத்தரவிடுவதாக எழுந்துள்ள புகார் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
