GO BACK

SIM கார்டில் 'தங்கச் சுரங்கம்'! 191 கிராம் தங்கம்.. 26 லட்சம் லாபம்! ரசவாதி'யின் வேட்டை!


குப்பையில் கொட்டிய சிம் கார்டில் 'தங்கச் சுரங்கம்'! 191 கிராம் தங்கம்.. 26 லட்சம் லாபம்! சீன 'ரசவாதி'யின் அதிரடி வேட்டை!

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், பழைய எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து தங்கம் எடுக்கும் வித்தை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 'கியாவ்' (Qiao) என்ற நபர், தூக்கி எறியப்பட்ட பழைய சிம் கார்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து சுமார் 191.73 கிராம் தங்கத்தைப் பிரித்தெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 26 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்தத் தங்கத்தை எடுப்பதற்காக கியாவ் சுமார் 2 டன் எடையுள்ள சிம் கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் கழிவுகளைப் பயன்படுத்தியுள்ளார். சிம் கார்டுகள் துருப்பிடிக்காமல் இருக்கவும், மின்சாரத்தை நன்றாகக் கடத்தவும் அதன் சிப்களில் மிக மெல்லிய அளவில் தங்கப் பூச்சு பூசப்பட்டிருக்கும். கியாவ் ஒரு பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் அமிலங்களை ஊற்றி, அதில் இந்த சிம் கார்டுகளை ஊறவைத்து, வேதியியல் மாற்றங்கள் மூலம் தங்கத்தைப் பிரித்தெடுக்கும் வீடியோ சீன சமூக வலைதளங்களில் 50 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

முதலில் சிம் கார்டுகளை அமிலத்தில் கரைத்து 'தங்கக் கூழ்' (Gold mud) போல மாற்றிய அவர், பின்னர் அதை வடிகட்டி 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருக்கியுள்ளார். இறுதியில் அவருக்குக் கிடைத்த அந்த 191 கிராம் தங்கக்கட்டி, பலரையும் பழைய சிம் கார்டுகளைத் தேடி அலைய வைத்துள்ளது. இதனால் சீனாவில் பழைய சிம் கார்டுகளை விற்கும் ஆன்லைன் தளங்களில் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் பழைய செல்போன் மற்றும் சிம் கார்டுகளை ஒரு தங்கச் சுரங்கமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், இந்த 'ரசவாதம்' (Alchemy) நினைப்பது போல அவ்வளவு எளிதானது அல்ல என்று கியாவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். "நான் ஒரு உரிமம் பெற்ற தொழில்முறை நிபுணர் என்பதால் இதைச் செய்தேன்; சாதாரண மக்கள் வீட்டில் இதை முயற்சிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும்" என்று அவர் கூறியுள்ளார். இந்தச் செயல்பாட்டின் போது வெளியாகும் நச்சுப் புகையும், பயன்படுத்தப்படும் 'அக்வா ரெஜியா' (Aqua Regia) போன்ற வீரியமிக்க அமிலங்களும் நுரையீரலைப் பாதிப்பதோடு, வெடி விபத்துகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு சராசரி சிம் கார்டில் 0.01 மில்லிகிராம் அளவுக்கும் குறைவான தங்கம் மட்டுமே இருக்கும். அதாவது, கியாவ் எடுத்தது போன்ற ஒரு பெரிய தங்கக்கட்டியைப் பெற லட்சக்கணக்கான சிம் கார்டுகள் தேவைப்படும். தனிநபர்கள் இதைச் செய்வது பொருளாதார ரீதியாக நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்பதால், இதை ஒரு வேடிக்கையான வீடியோவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கீகாரம் இன்றி இத்தகைய நச்சு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவது சீனாவிலும் இந்தியாவிலும் சட்டப்படி குற்றமாகும்.

இருந்தாலும், "நாமும் இத்தனை காலம் குப்பையில் போட்ட சிம் கார்டுகளில் இவ்வளவு தங்கம் இருந்ததா?" என இணையவாசிகள் பலரும் கமெண்டுகளில் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர். எலக்ட்ரானிக் கழிவுகளுக்குள் ஒளிந்திருக்கும் இந்த 'மஞ்சள் உலோகம்', மறுசுழற்சித் துறையில் எவ்வளவு பெரிய வாய்ப்புகள் உள்ளன என்பதை உலகுக்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.