
உலகின் மிகப்பெரிய மெகா டீல்: $1.25 ட்ரில்லியன் மதிப்பில் ஸ்பேஸ்எக்ஸ் - xAI இணைப்பு! மஸ்க்கின் விண்வெளி சாம்ராஜ்யம் ரெடி!
டெக் உலகின் ஜாம்பவான் எலோன் மஸ்க், தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI ஆகியவற்றை இணைப்பதாக அறிவித்து ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த மெகா இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1.25 ட்ரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 104 லட்சம் கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகிலேயே ஒரு தனியார் நிறுவனம் எட்டும் மிகப்பெரிய வர்த்தக மதிப்பாகும்.
இந்த இணைப்பின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அறிவியல் நோக்கம் ஒளிந்திருக்கிறது. "பூமியில் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) தரவு மையங்களை (Data Centers) பராமரிக்க அதிக அளவிலான மின்சாரமும், குளிர்விப்பு வசதிகளும் தேவைப்படுகின்றன. ஆனால், விண்வெளியில் சூரிய சக்தி தாராளமாகக் கிடைப்பதாலும், இயற்கையான குளிர் சூழல் நிலவுவதாலும், அங்கேயே ஏஐ தரவு மையங்களை அமைப்பதுதான் எதிர்காலத்திற்குச் சிறந்தது" என மஸ்க் விளக்கியுள்ளார். இதற்காக சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவி விண்வெளி சார்ந்து இயங்கும் ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் xAI நிறுவனத்தின் வசமுள்ள 'க்ரோக்' (Grok) சாட்பாட் மற்றும் 'X' (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத் தளம் ஆகியவை இனி ஸ்பேஸ்எக்ஸ் குடையின் கீழ் வரும். இதன் மூலம் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள் இணையம் (Starlink), சமூக ஊடகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கப்படுகின்றன. இது மஸ்க்கின் செவ்வாய் கிரகப் பயணம் மற்றும் விண்வெளி குடியேற்றத் திட்டங்களுக்குத் தேவையான பெரும் நிதியைத் திரட்ட உதவும் எனப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பொதுப் பங்குகளை (IPO) வெளியிடத் தயாராகி வரும் நிலையில், இந்த இணைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த ஐபிஓ வெற்றிகரமாக நடந்தால், உலகப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு வெளியீடாக இது அமையும். இதன் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.5 ட்ரில்லியன் டாலரைத் தாண்டக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இருப்பினும், இவ்வளவு பெரிய அதிகாரக் குவிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உலக நாடுகளும், அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்புகளும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையுடன் ஸ்பேஸ்எக்ஸ் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், இந்த ஏஐ இணைப்பு தேசிய பாதுகாப்பு ரீதியாக ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்படலாம். எது எப்படியோ, எலோன் மஸ்க்கின் இந்த 'விண்வெளி ஏஐ' கூட்டணி மனித நாகரிகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.