GO BACK

பிரித்தானியாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை: கார் தரிப்பிடத்தில் மனைவியை 17 முறை குத்திக் கொன்ற கணவன் - நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!

கார்டிஃப் (பிப்ரவரி 21, 2026) பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் உள்ள கார்டிஃப் நகரில், தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில் கார் தரிப்பிடம் (Car Park) ஒன்றில் வைத்து கொலை செய்த 38 வயதான திஸார வெரகலகே (Thisara Weragalage) என்ற இலங்கை நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 32 வயதான தனது மனைவி நிரோதா (Niwunhellage Dona Nirodha Kalpani Niwunhella) மீது கொண்ட அதீத பொறாமை மற்றும் சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொலையை அவர் செய்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தீர்ப்பை கார்டிஃப் கிரவுன் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 20) வழங்கியுள்ளது.

கடந்த 2017-ல் இலங்கையில் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினர், 2022-ல் சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி பிரித்தானியாவுக்குப் குடிபெயர்ந்தனர். இருப்பினும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கடந்த 2025 ஏப்ரல் முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தனது மனைவி வேறொருவருடன் நட்பாக இருப்பதை அறிந்த திஸார, ஆத்திரமடைந்து அவரைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்துள்ளார். கொலை செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பே கடையிலிருந்து கத்திகளை வாங்கி வந்த அவர், ஆகஸ்ட் 21, 2025 அன்று காலை தனது மனைவி தங்கியிருந்த வீட்டின் கார் தரிப்பிடத்தில் மறைந்திருந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

திஸார நடத்திய தாக்குதலில் நிரோதாவின் மார்பு, கழுத்து மற்றும் முகத்தில் 17 முறை பலமான கத்திக்குத்துக்கள் விழுந்தன. இந்தத் தாக்குதல் எவ்வளவு ஆவேசமாக இருந்தது என்றால், குத்திய வேகத்தில் அவர் கையில் இருந்த கத்தி முறிந்து நிரோதாவின் உடலிலேயே சிக்கிக் கொண்டது. பலத்த காயமடைந்த நிரோதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையைச் செய்த பின்னர் தப்பியோடிய திஸார, லாரி ஒன்றின் அடியில் விழுந்து தற்கொலைக்கு முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். "இது ஒரு மிருகத்தனமான மற்றும் சுயநலமான செயல்" என்று நீதிபதி டேனியல் வில்லியம்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இந்தக் கொலைக் குற்றச்சாட்டை மறுத்து வந்த திஸார, பின்னர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம், அவர் குறைந்தது 23 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. "இரக்கமே இல்லாத இந்த நபரால் ஒரு சிறந்த பெண்ணின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுவிட்டது" என நீதிமன்றத்தில் நிரோதாவின் குடும்பத்தினர் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். இந்தப் படுகொலைச் சம்பவம் பிரித்தானியாவில் வாழும் இலங்கைச் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.