இந்தத் தாக்குதலின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, அந்தத் தீவிரவாதி நெருங்கி வந்து வெடிக்கச் செய்வது பதிவாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவன் 'அன்சார்-உல்-இஸ்லாம்' (Ansar-ul-Islam) என்ற அமைப்பைச் சேர்ந்த அபு தர்தா (Abu Darda) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த அமைப்பு பாகிஸ்தானில் ஒரு தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இதே நாளில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் (Kohat) பகுதியில் மற்றொரு தாக்குதல் நிகழ்ந்தது. நீதிமன்றத்திற்கு விசாரணைக் கைதிகளை அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு உயர் அதிகாரி (DSP) உட்பட ஆறு காவல்துறையினர் மற்றும் இரண்டு பொதுமக்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பின் தீவிரவாதிகள் அந்த வாகனத்தை முழுமையாகத் தீ வைத்து எரித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இந்தத் தொடர் தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இவை நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. எல்லையில் தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
