சாதாரண மனிதன் To ‘TESCO’ CEO: இங்கிலாந்து சில்லறை வர்த்தக உலகின் புதிய ‘கிங்’ அஷ்வின் பிரசாத் !

இங்கிலாந்தின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனமான ‘டெஸ்கோ’ (Tesco), தனது புதிய சிஇஓ-வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஷ்வின் பிரசாத்தை (Ashwin Prasad) அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது. வெறும் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண மேலாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று 3 லட்சம் பணியாளர்களை வழிநடத்தும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் தலைவராக அவர் உயர்ந்துள்ளது, புலம்பெயர்ந்து வாழும் பலருக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.

நியூசிலாந்தில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த அஷ்வின் பிரசாத், 2010-ம் ஆண்டு இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்தபோது பல சவால்களைச் சந்தித்தார். ‘ஹம்பிள் பிகினிங்ஸ்’ (Humble Beginnings) என்று இவரே பெருமையுடன் குறிப்பிடும் இவரது வாழ்க்கை முறை, ஒரு சிறிய மிட்டாய் விற்பனைப் பிரிவின் (Confectionery) மேலாளராகத்தான் தொடங்கியது. தனது கடின உழைப்பாலும், வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் திறனாலும், படிப்படியாக முன்னேறி இன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கான டெஸ்கோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.


கொரோனா பேரிடர் காலத்தில், இங்கிலாந்து மக்கள் உணவுத் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் அஷ்வின் பிரசாத்தின் பங்கு மிக முக்கியமானது. டெஸ்கோ நிறுவனத்தின் ‘குரூப் சீஃப் ப்ராடக்ட் ஆபீஸர்’ (Group Chief Product Officer) என்ற பொறுப்பில் இருந்தபோது, விநியோகச் சங்கிலி (Supply Chain) சீர்குலைந்த போதிலும், திறம்படச் செயல்பட்டு பொருட்களை மக்கள் கைகளில் சேர்த்தார். இவரது இந்தத் திறமையான நிர்வாகமே, இவரை இங்கிலாந்தின் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உச்சபட்ச பதவிக்குக் கொண்டு வந்துள்ளது.

தற்போது சிஇஓ-வாகப் பொறுப்பேற்றுள்ள அஷ்வின் பிரசாத், "வலிமையான உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் யாராலும் சாதிக்க முடியும்" என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார். இவர் தலைமையின் கீழ் டெஸ்கோ நிறுவனம் தற்போது ஏஐ (AI) தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. "ஒரு சாதாரண மனிதனாக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று ஒரு நாட்டின் வர்த்தகத்தையே தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ள அஷ்வின் பிரசாத்தின் கதை, கனவுகளுடன் லண்டன் வரும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு பாடமாகும்."

Previous Post Next Post

Contact Form