GO BACK

T.R.பாலு தலைமையில் அதிரடி படை - திமுகவின் ‘மாஸ்டர் பிளான்’ பலிக்குமா?


கூட்டணி கட்சிகளுக்கு செக் வைத்த ஸ்டாலின்! டி.ஆர்.பாலு தலைமையில் அதிரடி படை - திமுகவின் ‘மாஸ்டர் பிளான்’ பலிக்குமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் கட்சியான திமுக தனது வெற்றிக் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளவும், அதே சமயம் தொகுதிகளைக் விட்டுக் கொடுக்காமல் இருக்கவும் காய்நகர்த்தத் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விரைவில் கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளது. குறிப்பாக, காங்கிரஸின் அதிருப்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த வியூகம் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

சமீபகாலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், திமுக தலைமைக்கு எதிராக மறைமுகமாகப் புகார்களைத் தெரிவித்து வந்தனர். காங்கிரஸ் எம்பிக்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி போன்றோரின் பேச்சுகள் இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியது. இந்த விரிசலைச் சரி செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக எம்.பி. கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். "கூட்டணி வலுவாக உள்ளது" என்று கனிமொழி விளக்கம் அளித்தாலும், உள்ளுக்குள் சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளுக்கு வளைந்து கொடுக்காமல் இருக்க, முதல்வர் ஸ்டாலின் ஒரு ரகசியத் திட்டத்தைத் தயார் செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள், அவை எந்தெந்த மாவட்டங்கள் என்பது குறித்த ஒரு துல்லியமான பட்டியலை திமுக தலைமையே ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாம். டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவிடம், "இந்த எண்ணிக்கைக்குள் கூட்டணிக் கட்சிகளைச் சம்மதிக்க வைக்க வேண்டும்" என்று முதல்வர் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

மறுபுறம், திமுகவின் முக்கியத் தூண்களாக விளங்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரி கட்சிகள் இந்த முறை கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளைக் கேட்கத் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகக் கருதுவதால், இரட்டை இலக்கத் தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக உள்ளன. கூட்டணிக் கட்சிகளின் இந்த எதிர்பார்ப்பு, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவைப் பொறுத்தவரை, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அதிக இடங்களில் தங்கள் கட்சி நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைவான தொகுதிகளை ஒதுக்கி, அவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது. இந்த 'செக்மேட்' உத்தியை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருபுறம் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், திமுகவின் இந்த உள்கட்சி மற்றும் கூட்டணி மேலாண்மை அக்கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடித் திட்டம் கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்துமா அல்லது புதிய மோதலுக்கு வித்திடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.