GO BACK

ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் அதிரடித் திட்டம்?: ஆயதுல்லா கமேனியின் ரகசியப் பதவியேற்பு வியூகம் - பதற்றத்தில் மத்திய கிழக்கு!

வாஷிங்டன் (பிப்ரவரி 23, 2026): ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிடத் தவறினால், அடுத்த சில நாட்களில் அந்நாட்டின் மீது 'மின்னல் வேகத் தாக்குதல்' நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சி-17 குளோப்மாஸ்டர் மற்றும் எப்-35 போன்ற அதிநவீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அமெரிக்கா குவித்து வருகிறது. அணுவாயுதத் தயாரிப்பிற்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெற்றுவிடும் என்ற உளவுத்துறைத் தகவலே இந்த அவசரத் திட்டத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் அல்லது படுகொலை முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில், ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி ஒரு 'நிச்சயமற்ற காலத்திற்கானப்' (Doomsday) பதவியேற்புத் திட்டத்தை ரகசியமாக வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 86 வயதான கமேனி, தனது பாதுகாப்பு கருதி ரகசியப் பாதாள அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒருவேளை தனக்கு ஏதேனும் நேர்ந்தால், உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றத் தனது மகன் மொஜ்தபா கமேனி மற்றும் மூன்று மூத்த மதகுருக்களை உள்ளடக்கிய ஒரு குழுவை அவர் தயார் நிலையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகள் அனைத்தும் தற்போது 'இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை' (IRGC) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தாக்குதல் நடந்தால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவிப் பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசு எதிர்ப்புப் போராட்டங்களால் அந்நாடு இருமுனை நெருக்கடியில் தவிக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில், வரும் வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெறவுள்ள அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை போர் தவிர்க்கப்படுவதற்கான கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடச் சம்மதித்தால் மட்டுமே போர் மேகம் விலகும். இல்லையெனில், அடுத்த 10 நாட்களுக்குள் அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகள் மத்திய கிழக்கை மிகுந்த கவலையுடன் உற்று நோக்கி வருகின்றன.