GO BACK

ஒபாமா தம்பதியை குரங்காக சித்தரித்த வீடியோ - வெளியிட்ட ரம் மன்னிப்பு கேட்க்க மறுப்பு !

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் மிகவும் மோசமான மற்றும் இனவெறி கலந்த வீடியோ ஒன்றை டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது உலகளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் எதற்காகவும் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் எந்தத் தவறும் செய்யவில்லை" என்று ட்ரம்ப் படு கெத்தாகப் பதில் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அமெரிக்க அரசியலில் அனலைப் பறக்கவிட்டுள்ளது.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அந்த வீடியோவில் ஒபாமா தம்பதி குரங்குகளாக மாற்றப்பட்டிருந்த பகுதியை தான் கவனிக்கவில்லை என்று ஒரு போடு போட்டார். "நான் அந்த வீடியோவின் ஆரம்பப் பகுதியைத்தான் பார்த்தேன், அதில் தேர்தல் மோசடிகள் குறித்துப் பேசியிருந்தார்கள். அது எனக்குச் சரியானதாகத் தோன்றியதால் அதைப் பகிர்ந்துவிட்டேன். அந்த வீடியோவை நான் உருவாக்கவில்லை, யாரோ போட்டதை நான் ரீ-ட்ரூத் (Re-truth) தான் செய்தேன்" என்று கூலாக விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்திற்காகத் தனது ஊழியர் யாரையும் வேலையை விட்டுத் தூக்கப் போவதில்லை என்றும் அவர் கறாராகச் சொல்லிவிட்டார். "கறுப்பின மக்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர், அவர்களுக்கு நான் பல நன்மைகளைச் செய்துள்ளேன். உண்மையைச் சொல்லப்போனால், நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் பார்த்த மிகக் குறைந்த இனவெறி கொண்ட அதிபர் நான்தான்" என்று தனக்குத் தானே சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டார். இதைக் கேட்ட செய்தியாளர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டனர்.

ட்ரம்ப்பின் இந்தச் செயலுக்கு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி, சொந்தக் கட்சியினரும் கூட கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இது ஒரு அருவருப்பான செயல் என்றும், குடியரசுக் கட்சியினர் அனைவரும் இதை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் அசராத ட்ரம்ப், தன்னை கேள்வி கேட்ட பத்திரிகையாளரை "எனக்குத் தெரிந்தது கூட உனக்குத் தெரியாது" என்று விளாசித் தள்ளியுள்ளார்.