அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) அண்மையில் அளித்த பேட்டியில், ஈரான் அணுவாயுதத் தயாரிப்பிற்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெற இன்னும் சில நாட்களே (சுமார் ஒரு வாரம்) உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த அணுசக்தி முன்னேற்றம் "மிகவும் அபாயகரமானது" என்று குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் அணுவாயுதம் ஏந்துவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதியளித்துள்ளார். இதனால், ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது 'மின்னல் வேகத் தாக்குதல்' நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட வேண்டும் என்பதற்காக, அந்நாட்டின் மீது அமெரிக்கா 'அதிகபட்ச அழுத்தம்' (Maximum Pressure) கொடுக்கும் கொள்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீதும் தடைகள் விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளதுடன், உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டங்கள் மீண்டும் வெடித்துள்ளன. வெளிநாட்டுப் போர் அச்சுறுத்தல் மற்றும் உள்நாட்டு மக்கள் கிளர்ச்சி என ஈரான் இருமுனை நெருக்கடியில் தவிக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில், வரும் வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெறவுள்ள அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் தனது யுரேனியச் செறிவூட்டலைக் குறைக்கச் சம்மதித்தால் மட்டுமே போர் தவிர்க்கப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா மறைமுகமாகத் தெரிவித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
