ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பல தசாப்தங்களாகச் சேகரிக்கப்பட்ட 3.8 மில்லியனுக்கும் அதிகமான UFO தொடர்பான ஆவணங்களைக் கொண்டிருந்த ஒரு முன்னணி ஆன்லைன் தரவுத்தளம் (Vault) திடீரெனச் செயல்பாட்டை இழந்தது. அந்த இணையதளத்தில் இருந்த லட்சக்கணக்கான கோப்புகள் மர்மமான முறையில் நீக்கப்பட்டு அல்லது 'அணுக முடியாதபடி' (Access Denied) மாற்றப்பட்டது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா அல்லது முக்கியமான தகவல்களை மறைப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டச் செயலா எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளன.
இந்தத் தரவுத்தளம் காலியானதற்கும், அரசின் ரகசிய நிறுவனங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனப் பல சதியாலோசனை கோட்பாடுகள் (Conspiracy Theories) எழுந்துள்ளன. "உண்மைகள் வெளிவருவதைத் தடுக்கச் சில ரகசியக் குழுக்கள் செயல்படுகின்றன" என UFO ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம், அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து அரசு ஆவணங்களை முறையாக டிஜிட்டல் மயமாக்கி வகைப்படுத்துவதற்காக இந்தத் தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், 38 லட்சம் கோப்புகள் ஒரே நேரத்தில் காணாமல் போனது உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
பென்டகன் கடந்த 2024-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், ட்ரம்ப்பின் தற்போதைய உத்தரவு மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த இந்த மர்மமான மறைவு, ஏதோ ஒரு பெரிய உண்மை மறைக்கப்படுகிறதா என்ற கேள்வியை வலுப்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் பென்டகன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்போகும் ஆவணங்களில் என்ன இருக்கும் என்பதை அறிய உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
