GO BACK

நாளை TRUMP - ஈரான் பிரதிநிதிகள் சந்திப்பு -பேச்சுவார்த்தை ஓமனில் நடக்கவுள்ளது !

 

முறிந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது: கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இஸ்தான்புல் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ரத்து செய்யப்படும் நிலைக்குச் சென்றது. பேச்சுவார்த்தை நடக்கும் இடம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருப்பினும், சவூதி அரேபியா மற்றும் எகிப்து உள்ளிட்ட 9 அரபு நாடுகளின் தீவிர முயற்சியால், இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை பிப்ரவரி 6, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஓமன் நாட்டின் மஸ்கட் (Muscat) நகரில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

அதிபர் டிரம்பின் எச்சரிக்கை: பேச்சுவார்த்தை ரத்தாகும் சூழல் ஏற்பட்டபோது, ஈரானின் உச்ச தலைவர் கமேனி "மிகவும் கவலைப்பட வேண்டும்" என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்தார். "நாங்கள் ஈரானுடன் பேசிக் கொண்டிருக்கிறோம், ஏதாவது ஒரு நல்ல முடிவு கிடைத்தால் மகிழ்ச்சி; இல்லையெனில் மிகவும் மோசமான விளைவுகள் (Bad things) ஏற்படும்" என்று டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதே சமயம், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேசிய டிரம்ப், ஈரானைத் தனிமைப்படுத்த சீனாவின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.

இறுதி வாய்ப்பாகக் கருதப்படும் சந்திப்பு: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ள நிலையில், நாளை நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை போர் மூளுமா அல்லது அமைதி திரும்புமா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஈரானின் அணு ஆயுதச் செறிவூட்டலைத் தற்காலிகமாக நிறுத்தினால் மட்டுமே பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.