GO BACK

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு 900 போலீசார் பாதுகாப்புப் : தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதம்


 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம்சேரியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்திக்க உள்ளார். இதற்காக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 33 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025 செப்டம்பரில் கரூரில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை காவல்துறை மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தக் கூட்டத்திற்காக வேலூர் எஸ்பி தலைமையில், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 900-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆரம்பத்தில் 25,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய வெப்பமான காலநிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை 4,900-ஆக காவல்துறை குறைத்துள்ளது. கூட்டத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக QR-கோட் அடங்கிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 6 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 30 மருத்துவர்கள், 50 செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளுடன் இந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2026 தேர்தலில் ‘விசில்’ சின்னத்துடன் களமிறங்கும் தவெக-வுக்கு, இந்தக் கூட்டம் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.