53 மில்லியன் பவுண்டை சுருட்டிய அல்பேனிய கொள்ளையர்கள் இவர்கள் தான் !

லண்டன் (பிப்ரவரி 22, 2026): பிரித்தானியாவின் கென்ட் (Kent) பகுதியில் உள்ள செக்யூரிடாஸ் பணக் கிடங்கில் கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி நள்ளிரவில் அரங்கேறிய அந்தப் பிரம்மாண்ட கொள்ளைச் சம்பவம் இன்றும் உலகையே வியக்க வைக்கிறது. சுமார் 53 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் பல நூறு கோடிகள்) ரொக்கப்பணத்தை ஒரு ஆயுதமேந்திய கும்பல் அள்ளிச் சென்றது. இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டது அல்பேனியாவைச் சேர்ந்த ஜெட்மிர் புப்பாபா (Jetmir Bucpapa) மற்றும் எர்மிர் ஹைசெனாஜ் (Ermir Hysenaj) ஆகிய இருவர்தான் என்பது விசாரணையில் அம்பலமானது. இதில் ஹைசெனாஜ் அந்தப் பணக் கிடங்கிலேயே ஊழியராகச் சேர்ந்து, ரகசியக் கேமரா மூலம் பாதுகாப்பு ரகசியங்களைத் திருடிக் கொடுத்த 'இன்சைடர்' (Inside Man) ஆவார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் ஏதோ ஒரு சினிமா படம் போலத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. கொள்ளையர்கள் போலீஸ் வேடமிட்டுச் சென்று, கிடங்கின் மேலாளர் கொலின் டிக்சனை முதலில் கடத்தினர். பின்னர் அவரது மனைவி மற்றும் 8 வயது மகனைத் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து என்று மிரட்டி, மேலாளரின் உதவியுடனேயே கிடங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த 14 ஊழியர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, லாரி லாரியாகப் பணத்தைச் சுருட்டினர். அங்கிருந்த இன்னும் 150 மில்லியன் பவுண்டை எடுத்துச் செல்ல இடம் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை முடிந்த சில வாரங்களிலேயே போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். கொள்ளையர்கள் பயன்படுத்திய முகமூடிகள் மற்றும் மேக்கப் சாதனங்களில் இருந்த டிஎன்ஏ (DNA) துகள்கள் அவர்களைக் காட்டிக்கொடுத்தன. ஜெட்மிர் புப்பாபா மற்றும் ஹைசெனாஜ் ஆகிய இரு அல்பேனியர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு நீண்ட காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெட்மிர் புப்பாபா தனது தண்டனைக் காலத்தை முடித்துவிட்டு, கடந்த 2020-ம் ஆண்டு அல்பேனியாவிற்கு நாடுகடத்தப்பட்டார். அங்கு அவர் தற்போது ஒரு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொள்ளையில் திருடப்பட்ட 53 மில்லியன் பவுண்டில், இதுவரை சுமார் 21 மில்லியன் பவுண்ட் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 32 மில்லியன் பவுண்ட் (சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேல்) எங்கே போனது என்பது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. 20 ஆண்டுகள் கடந்தும், அந்தப் பணத்தைத் தேடும் பணியைக் கென்ட் போலீசார் இன்னும் கைவிடவில்லை. இன்று அதன் 20-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, எஞ்சிய பணத்தைக் கண்டுபிடிக்கப் பொதுமக்கள் உதவ வேண்டும் எனப் போலீசார் மீண்டும் ஒரு புதிய கோரிக்கையை விடுத்துள்ளனர். 


Previous Post Next Post

Contact Form