Ads Top

வாரிசுரிமையில் இருந்து நீக்கப்படுகிறாரா ஆண்ட்ரூ?: எப்ஸ்டீன் விவகாரத்தில் அதிரடி திருப்பம் - பிரித்தானிய நாடாளுமன்றம் ஆலோனை!

லண்டன் (பிப்ரவரி 21, 2026): பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரை அரியணை வாரிசுரிமைப் பட்டியலில் (Line of Succession) இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்குவது குறித்து பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அமெரிக்கக் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு மற்றும் சமீபத்தில் எழுந்த புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டு 11 மணிநேரம் விசாரிக்கப்பட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கைதைத் தொடர்ந்து, அவர் இனி ஒருபோதும் மன்னராகும் தகுதியைப் பெறக்கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஏற்கனவே மன்னர் சார்லஸ் தனது சகோதரரான ஆண்ட்ரூவின் 'இளவரசர்' உள்ளிட்ட அனைத்து அரச பட்டங்களையும் கடந்த ஆண்டு பறித்துவிட்டார். தற்போது எட்டாவது இடத்தில் இருக்கும் ஆண்ட்ரூவை வாரிசுரிமையில் இருந்து நீக்க வேண்டுமானால், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இதற்கெனத் தனிச் சட்டம் (Act of Parliament) இயற்றப்பட வேண்டும். இது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லூக் பொல்லார்ட் கூறுகையில், "மன்னராட்சி முறையின் நற்பெயரைக் காக்க இதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட 'YouGov' கருத்துக்கணிப்பில், 82 சதவீத பிரித்தானிய மக்கள் ஆண்ட்ரூவை வாரிசுரிமைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். லிபரல் டெமக்ராட்ஸ் மற்றும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (SNP) உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. இருப்பினும், இந்தச் சட்டத்தை அமல்படுத்த கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 காமன்வெல்த் நாடுகளின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதால், இது ஒரு நீண்ட சட்டப் போராட்டமாக அமைய வாய்ப்புள்ளது.

தனது 66-வது பிறந்தநாளன்று கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ, தற்போது விசாரணைக் கைதியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக (Misconduct in Public Office) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "சட்டம் தனது கடமையைச் செய்யும்" என்று மன்னர் சார்லஸ் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஆண்ட்ரூவின் மீதான பிடி இறுக்கப்பட்டு வருகிறது. 1936-ல் மன்னர் எட்டாம் எட்வர்ட் பதவி விலகிய பிறகு, வாரிசுரிமையில் இருந்து ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

 

No comments:

Powered by Blogger.