பொதுவாகக் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் உயிருடன் இருப்பவர்களிடமிருந்தே (பெரும்பாலும் தாய் அல்லது சகோதரி) மேற்கொள்ளப்படும். ஆனால், உயிரிழந்த ஒருவரிடமிருந்து கருப்பையைப் பெற்று, அதன் மூலம் குழந்தை பிறப்பது பிரிட்டனில் இதுவே முதல் முறையாகும். ஐரோப்பாவிலேயே இது மூன்றாவது வெற்றிகரமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. "எனது கொடையாளரின் குடும்பத்திற்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்; அவர்களது மகளின் ஒரு பகுதி என்னுள் வாழ்ந்துகொண்டிருக்கிறது" என்று கிரேஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சாதனைக்குப் பின்னால் சுமார் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்களின் உழைப்பு உள்ளது. 2024-ம் ஆண்டு சுமார் 10 மணிநேரம் நீடித்த அந்தச் சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கருப்பை சீராகச் செயல்படுவதை உறுதி செய்த மருத்துவர்கள், பின்னர் 'ஐவிஎஃப்' (IVF) முறையில் கருவைச் செலுத்தினர். கர்ப்பக் காலம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் இருந்த கிரேஸ், கடந்த டிசம்பர் மாதம் 'ஹ்யூகோ' (Hugo) என்ற அழகான ஆண் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார். இந்தச் செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உலகையே வியக்க வைத்துள்ளது.
இறந்தவர்களிடமிருந்து பெறப்படும் கருப்பை மூலம் குழந்தை பெறுவது என்பது, எதிர்காலத்தில் கருப்பை பாதிப்பு உள்ள ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என மருத்துவர் ரிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார். தற்போது பிரிட்டனில் இதற்காக 10 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே உயிருடன் இருப்பவர்களிடமிருந்து கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய உலகளாவிய வெற்றி இந்திய மருத்துவத் துறைக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
