GO BACK

BREAKING NEWS -உக்ரைனின் flamingo drones 900KM கடந்து "ரஷ்யாவின் ஏவுகணை ஆலை மீது தாக்குதல்


 உக்ரைன் - ரஷ்யா போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் உட்பகுதிக்குள் நுழைந்து மிக முக்கியமான ஏவுகணை உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் உட்முர்டியா (Udmurtia) பகுதியில் அமைந்துள்ள வோட்கின்ஸ்க் (Votkinsk) ஆலை மீது சனிக்கிழமை அதிகாலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 900 மைல் (1,500 கி.மீ) தொலைவில் உள்ள இந்த ஆலை, ரஷ்யாவின் மிக வலிமையான இஸ்காண்டர் (Iskander) மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் டோபோல்-எம் (Topol-M) போன்ற ஏவுகணைகளைத் தயாரிக்கும் முக்கிய மையமாகும். இந்தத் தாக்குதலில் ஆலையின் முக்கிய உற்பத்திப் பிரிவுகள் பலத்த சேதமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உக்ரைன் உள்நாட்டிலேயே தயாரித்த ‘பிளமிங்கோ’ (Flamingo) எனும் அதிநவீன நீள்தூர ட்ரோன்கள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1,865 மைல் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன்கள், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டிச் சென்று துல்லியமாகத் தாக்கியுள்ளன. உட்முர்டியா பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் பிரெச்சலோவ் (Alexander Brechalov), ஆலை மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்யத் தரப்பு தெரிவித்துள்ளது. ஏவுகணை உற்பத்தியில் முக்கிப்பங்கு வகிக்கும் 22 மற்றும் 36 ஆகிய இரண்டு பணிமனைகள் (Workshops) இந்தத் தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வோட்கின்ஸ்க் ஆலை மட்டுமின்றி, ரஷ்யாவின் சமாரா (Samara) நகரில் உள்ள ஒரு எரிவாயு சுத்திகரிப்பு ஆலை (Gas processing plant) மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள நெஃப்டெகோர்ஸ்க் (Neftegorsk) ஆலை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரே இரவில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் ரஷ்யப் பாதுகாப்புத் துறை அதிர்ச்சியடைந்துள்ளது. ரஷ்யாவின் இஸ்கேவ்ஸ்க் (Izhevsk) விமான நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டு, விமானப் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன.

உக்ரைன் ராணுவம் மேற்கத்திய நாடுகளின் உதவியின்றி, தனது சொந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வளவு நீண்ட தூரம் சென்று தாக்கியிருப்பது போரின் போக்கை மாற்றும் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உக்ரைன் மீது ஏவப்படும் ஏவுகணைகளின் பிறப்பிடமான இந்த ஆலைகளையே அழிப்பதன் மூலம் ரஷ்யாவின் தாக்குதல் திறனை முடக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் ஆழமான பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ மையங்கள் இனி பாதுகாப்பானவை அல்ல என்பதை இந்தத் தாக்குதல் நிரூபித்துள்ளது. இந்த அதிரடித் தாக்குதலால் ரஷ்யாவின் ஏவுகணை விநியோகச் சங்கிலியில் பெரும் முட்டுக்கட்டை ஏற்படும் எனப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.