பனிப்புயலின் தீவிரம் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளுக்கும் நேற்று திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்கமாக நடத்தப்படும் 'ஆன்லைன்' வகுப்புகள் கூட இந்த முறை ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு முழுமையான விடுமுறை வழங்கப்பட்டது. சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜேஎஃப்கே (JFK) மற்றும் லா கார்டியா போன்ற முக்கிய விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
மணிக்கு 60 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று மற்றும் கனமழை கலந்த பனியினால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் நியூஜெர்சி மற்றும் நியூயார்க்கின் பல பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பனியை அகற்றும் பணியில் 2,600-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வீடற்றவர்களைப் பாதுகாக்க நகரின் பல பகுதிகளில் 'வார்மிங் சென்டர்கள்' (Warming Centers) எனப்படும் வெப்பமூட்டும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மேயர் மம்தானி கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய வானிலை ஆய்வு மையம் (NWS) வெளியிட்டுள்ள தகவலின்படி, மேரிலாந்து முதல் மைனே வரை சுமார் 5.4 கோடி மக்கள் இந்தப் புயலின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு 3 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் புயலின் வேகம் குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், உறைபனி மற்றும் வழுக்கும் சாலைகள் காரணமாக ஆபத்து நீடிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்டை மாகாணமான நியூஜெர்சியின் கவர்னர் மைகி ஷெரில் (Mikie Sherrill) அந்த மாகாணம் முழுவதற்கும் அவசரநிலையை நீட்டித்துள்ளார்.
