ரஷ்யாவிற்கு ‘செக்’ வைக்கும் பிரிட்டன்: ஆர்க்டிக் கடலில் குவியும் போர் கப்பல்கள்! ‘ஆபரேஷன் ஃபயர்கிரெஸ்ட்’ அதிரடி!
லண்டன்: சர்வதேச கடற்பரப்பில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்க பிரிட்டன் தனது பிரம்மாண்டமான ‘கேரியர் ஸ்டிரைக் குரூப்’ (Carrier Strike Group) படையை 2026-ல் வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ‘ஆபரேஷன் ஃபயர்கிரெஸ்ட்’ (Operation Firecrest) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கையை, ராயல் கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (HMS Prince of Wales) தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளது. இது ரஷ்யாவின் ஆக்ரோஷமான நகர்வுகளைத் தடுப்பதற்கான ஒரு 'பவர்ஃபுல்' எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடிப் படையில் அதிநவீன எஃப்-35 (F-35) போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, கடலுக்கடியில் அமைந்துள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் மற்றும் எரிசக்தி குழாய்களை (Undersea Infrastructure) ரஷ்யா குறிவைப்பதாக எழுந்துள்ள அச்சத்தையடுத்து, அவற்றைப் பாதுகாப்பதே இந்த மிஷனின் முக்கிய நோக்கமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பிரிட்டிஷ் கடல் எல்லைக்கு அருகே ரஷ்யப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் 30% அதிகரித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் (MOD) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போது ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்து வரும் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), "பிரிட்டன் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்; தேவைப்பட்டால் போரிடவும் தயங்காது" என்று ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் பிற நேட்டோ (NATO) நாடுகளுடன் இணைந்து செயல்படவுள்ள இந்தப் படை, ஆர்க்டிக் பகுதியில் உருகி வரும் பனிக்கட்டிகளால் உருவாகும் புதிய கடல் வழிப்பாதைகளைக் கைப்பற்றத் துடிக்கும் ரஷ்யா மற்றும் சீனாவின் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் இந்தத் துணிச்சலான முடிவு, ஐரோப்பியப் பிராந்தியத்தில் ரஷ்யாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க நேட்டோ கூட்டணிக்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்த்துள்ளது. மார்ச் 2026-ல் தொடங்கவுள்ள இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க போர் விமானங்கள் பிரிட்டிஷ் கப்பல்களில் இருந்து ஏறி இறங்கிப் பயிற்சி செய்யவுள்ளன. "நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை, ஆனால் எங்களது பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" என்ற செய்தியை இதன் மூலம் பிரிட்டன் உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
