GO BACK

கேரவானில் வைத்து துப்பாக்கி தயாரிப்பு- பிரிட்டனையே நடுங்க வைத்த நபர் கைது (VIDEO)

கேரவனில் நடந்த பாதாள உலக துப்பாக்கித் தொழிற்சாலை: போலீஸ் அதிகாரி கொலையில் கிடைத்த அதிரடித் திருப்பம்!

பிரிட்டனின் மிகப்பெரிய ட்ராவலர் குடியிருப்பில் உள்ள ஒரு சாதாரண கேரவனில் (Caravan), யாருக்கும் சந்தேகம் வராதபடி ரகசியமாகத் துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்ததைக் கண்டுபிடித்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வெறும் கேரவன் தானே என்று நினைத்த இடத்தில்தான், பாதாள உலகக் கும்பல்களுக்குத் தேவையான அதிநவீனத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. ஒரு சொகுசு கார் டீலருக்கும், கடந்த 2005-ஆம் ஆண்டு பிராட்போர்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பிசி ஷரோன் பெஷனிவ்ஸ்கியின் கொலை வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலே, இந்த மிகப்பெரிய நெட்வொர்க்கை அம்பலப்படுத்த வழிவகுத்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஷரோன் பெஷனிவ்ஸ்கியின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான பிரான் திட்டா கான் (Piran Ditta Khan), பல ஆண்டுகளாகப் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து, சமீபத்தில் தான் (2024-ல்) தண்டிக்கப்பட்டார். அவரோடு தொடர்புடைய நபர்களைக் கண்காணித்தபோது தான், இந்தச் சட்டவிரோத ஆயுதத் தயாரிப்புப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிரிமினல் கும்பல்களுக்குத் தேவையான 'Mac-10' போன்ற அதிவேக இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் இந்த ரகசிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கும்பல், பழைய துப்பாக்கிகளை வாங்கி அவற்றை மீண்டும் உயிர்ப்பிப்பது மட்டுமல்லாமல், புதிதாகத் துப்பாக்கிகளை உருவாக்கும் அளவுக்குத் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுள்ளனர். ஒரு சொகுசு கார் விற்பனையாளரின் சொகுசு வாழ்க்கை முறை மற்றும் அவரது சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் போலீஸாரின் பார்வையில் விழுந்தன. அவரைத் துரத்தியபோது தான், பிரிட்டனின் முக்கியக் குற்றக் கும்பல்களுக்குத் தேவையான "மரணம் விளைவிக்கும் கருவிகள்" எங்கே தயாராகின்றன என்பது தெரியவந்தது.

தற்போது இந்தத் துப்பாக்கித் தொழிற்சாலையில் இருந்து விநியோகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை மீட்கும் பணியில் ஸ்காட்லாந்து யார்டு மற்றும் தேசியக் குற்றப்பிரிவு (NCA) அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் கொலைக்கு நீதி தேடித் தொடங்கிய இந்தப் பயணம், இன்று பிரிட்டனின் மிகப்பெரிய கிரிமினல் நெட்வொர்க்கை வேரோடு சாய்த்துள்ளது. இந்தத் துப்பாக்கிகள் எங்கே விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து கைதானவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.