மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் தனது மலைகளுக்கு அடியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ரகசிய ஏவுகணை நகரத்தின் (Underground Missile City) காட்சிகளை வெளியிட்டு உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய 'ஃபார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், கிலோமீட்டர் கணக்கில் நீளும் சுரங்கப்பாதைகளில் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஷாஹெட் (Shahed) ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் காட்சியளிக்கின்றன. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈரானைத் தாக்க ஒரு ஏவுகணைக்கு பல மில்லியன் டாலர்களைச் செலவழித்து வரும் நிலையில், ஈரான் வெறும் சில ஆயிரம் டாலர்களில் தயாரிக்கப்பட்ட 'மலிவு விலை' ட்ரோன்களைக் கொண்டு அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கையே காலியாக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த வீடியோவில், சமீபத்தில் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உருவப்படம், இந்த பிரம்மாண்ட ஆயுதக் கிடங்கை மேலிருந்து பார்வையிடுவது போன்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. "ஷாஹெட்" எனப்படும் இந்தத் தற்கொலை படை ட்ரோன்கள் தயாரிக்க மிகக் குறைந்த நேரமே எடுத்துக் கொள்வதோடு, ஒரே லாரியில் பல ட்ரோன்களை ஏற்றிச் சென்று ஏவும் வசதியையும் ஈரான் பெற்றுள்ளது. அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணைகளைத் தீர்ந்துபோகும் நிலைக்குத் தள்ளும் நோக்கில், ஈரான் இந்த மலிவு விலை ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒரு நீண்ட காலப் போருக்குத் தயாராகி வருவதை இது காட்டுகிறது.
இதற்கிடையில், உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாகப் பிரகடனம் செய்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும், ரியாத்தில் உள்ள சிஐஏ தளம் மற்றும் துபாய் அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளன. குவைத்தில் ஈரானிய ஏவுகணைச் சிதறல்கள் விழுந்து 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், இந்த போர் அப்பாவி மக்களைப் பாதிப்பதை உறுதி செய்துள்ளது.
மறுபுறம், ஈரானின் அடுத்த தலைவராக வருபவர் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று இஸ்ரேல் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல்-உடெய்ட் (Al-Udeid) ராணுவத் தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் ராணுவக் கட்டமைப்பைத் தகர்க்க "ஆபரேஷன் எபிக் பியூரி" மூலம் 2,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், ஈரானின் சுரங்கப்பாதை ஏவுகணை நகரங்கள் இத்தகைய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்தப் போர் இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
