மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப்படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் தெற்கு துறைமுக நகரான புஷெரில் (Bushehr) உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த பயணிகள் விமானம் ஒன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வான்வழித் தாக்குதலில், புஷெர் விமான நிலையத்தின் ஓடுதளம் மற்றும் முனையங்கள் (Terminals) பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான 'ஏர்பஸ்' (Airbus) ரகப் பயணிகள் விமானம் ஒன்று ஏவுகணைத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுச் சிதைந்துள்ளது. இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட அதிர்வலைகளால் அருகில் இருந்த மற்றொரு விமானமும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் பயணிகள் அல்லது ஊழியர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடித் தகவல்கள் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை.
புஷெர் நகரமானது ஈரானின் ஒரே ஒரு அணுமின் நிலையத்தைக் கொண்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த அணுமின் நிலையத்திற்கு மிக அருகிலேயே விமான நிலையம் அமைந்துள்ளதால், இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, புஷெர் அணுமின் நிலையத்தின் புதிய அலகுகளின் கட்டுமானப் பணிகளை ரஷ்யாவின் 'ரோசாடம்' (Rosatom) நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும், அங்குப் பணியாற்றி வந்த ரஷ்ய வல்லுநர்களை வெளியேற்றும் பணிகளும் தொடங்கியுள்ளன.
ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் (Mehrabad) விமான நிலையம் மற்றும் ஏனைய முக்கிய விமானத் தளங்களும் இந்த 72 மணிநேரத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வான்பரப்பு முற்றிலும் மூடப்பட்டுள்ளதுடன், சர்வதேச விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய முடக்கம் ஏற்பட்டுள்ளது. போர்ச் சூழல் காரணமாகத் தங்களின் சொத்துக்களும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஈரானியத் தரப்பிலிருந்து இதற்குப் பலமான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
