நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி டேம் பகுதியைச் சேர்ந்த மோனிக் ராஜ் என்ற இளைஞர், எதிர்பாராத விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக மின் மோட்டாரை நிறுத்தச் சென்றபோது, அவர் அணிந்திருந்த மப்ளர் மோட்டாரில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவருக்கு மூளைச் செயலிழப்பு ஏற்பட்டது.
தங்களது ஒரே மகனை இழந்த ஆறாத் துயரத்திலும், மற்றவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மோனிக் ராஜின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உன்னதமான முடிவின் மூலம், உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த 6 நபர்களுக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது.
மகனின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர் அவரது உடலைத் தொட்டு வணங்கி விடை கொடுத்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டியுள்ள பல தரப்பினரும், மகனை இழந்த நிலையிலும் பிறரின் வாழ்வைப் பற்றிச் சிந்தித்த அந்தப் பெற்றோரின் தியாகத்தைப் போற்றி வருகின்றனர்.
தமிழக அரசின் புதிய உத்தரவின்படி, உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் முழு அரசு மரியாதையுடன் மோனிக் ராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
