மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஈரான் தனது தற்கொலை படை ட்ரோன்களைக் கொண்டு சவூதி அரேபியா மற்றும் துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் மோதியதில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக அந்த நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்குள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வாகன நிறுத்துமிடப் பகுதியில் (Parking lot) மற்றொரு ட்ரோன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏற்பட்ட தீ விபத்தினால் கறுப்புப் புகை மண்டலம் வானில் எழுந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். துபாய் அரசு ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது 'உறங்கும் செல்களை' (Sleeper cells) முடுக்கிவிட்டு, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகளைத் தாக்கி வருவதால், ஒட்டுமொத்தப் பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ளது. குவைத் மற்றும் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் 1,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் இந்தத் தாக்குதல்கள் தங்களின் இராணுவ நடவடிக்கையை முடக்க முடியாது என்றும், ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் ஏற்கனவே சிதைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தூதரகங்கள் மீதான இந்தத் தொடர் தாக்குதல்கள் அமெரிக்காவிற்கு ஒரு கௌரவச் சவாலாகப் பார்க்கப்படுகிறது. போரின் தீவிரம் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வணிக ரீதியிலான போக்குவரத்து மூலம் வெளியேறுமாறு (DEPART NOW) மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
