GO BACK

ஜோர்டானில் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பு மீது ஈரானின் தாக்குதல்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஜோர்டானின் முவாஃபக் சால்டி விமானப் படைத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன 'தாட்' (THAAD) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ரேடார் தொகுதியை ஈரான் படைகள் தாக்கி அழித்துள்ளன. சுமார் 300 மில்லியன் டொலர் (2,700 கோடி ரூபாய்) மதிப்பிலான இந்த AN/TPY-2 ரேடார் அமைப்பு, வான்வழி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து வழிநடத்துவதில் மிக முக்கியப் பங்காற்றி வந்தது. ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல், ஈரானின் இராணுவ உத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வழக்கமான இலக்குகளைத் தாக்குவதற்குப் பதிலாக, அமெரிக்காவின் வான்வெளித் தற்காப்பு அமைப்பின் 'கண்களாக' விளங்கும் முக்கிய ரேடார் நிலையங்களை மிகத் துல்லியமாக ஈரான் குறிவைத்துள்ளது. நிலத்தடி மற்றும் நடமாடும் ஏவுகணை ஏவுதளங்களை விட, இத்தகைய விலைமதிப்பற்ற ரேடார் தொகுதிகள் மீண்டும் எளிதில் கிடைக்காதவை என்பதால், அமெரிக்காவின் தற்காப்பு கட்டமைப்பில் இது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்புத் திறனை வலுவிழக்கச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது. இனிவரும் காலங்களில், ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டறிந்து இடைமறிக்கும் பொறுப்பு பெருமளவில் 'பேட்ரியாட்' (Patriot) பாதுகாப்பு அமைப்புகளின் மீது சுமத்தப்படும். எனினும், ஏற்கனவே இப்பகுதியில் போதிய கையிருப்பு இல்லாத நிலையில், இதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுப்பதில் அமெரிக்க இராணுவம் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் தங்களது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள், ஏவுகணைத் தொழிற்சாலைகள் மற்றும் தலைமை அலுவலகங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.