வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் நோக்கில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 'சோ ஹியோன்' (Choe Hyon) ரக போர் கப்பலை (Naval Destroyer) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, கப்பலின் செயல்திறன் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஆயுதக் கட்டமைப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார். கடற்படையை அணு ஆயுதங்களுடன் தயார் நிலையில் வைப்பதற்கான பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாக கிம் ஜாங் உன் இதன்போது பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுமார் 5,000 டன் எடையுள்ள இந்த 'சோ ஹியோன்' ரக கப்பல், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நவீன போர் கப்பல்களில் ஒன்றாகும். இந்த ஆய்வின் போது, கப்பலில் இருந்து ஏவப்படும் கடல்வழி-தரைவழி (Sea-to-surface) ஏவுகணை சோதனையையும் கிம் ஜாங் உன் முன்னின்று நடத்தினார். இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல் என்றும் வர்ணித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு வீதம் இத்தகைய உயர்தர போர் கப்பல்களைக் கட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் வடகொரியாவின் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்கா போன்ற 'எதிரி நாடுகளின்' அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, கடற்படையை அணு ஆயுதமயமாக்குவது காலத்தின் கட்டாயம் என கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார். வடகொரியாவின் ஒன்பதாவது கட்சி மாநாட்டைத் தொடர்ந்து, தனது இராணுவ இலக்குகளைப் புதுப்பித்துள்ள அவர், எந்தவொரு வெளிநாட்டுத் தலையீட்டையும் முறியடிக்கத் தயார் நிலையில் இருக்குமாறு தனது படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது வடகொரியாவின் நம்போ (Nampo) கப்பல் கட்டும் தளத்தில் மூன்றாவது போர் கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நவீன ஏவுகணைகள், ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தாங்கும் வகையில் இந்தக் கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தனது அணு ஆயுத பலத்தை வடகொரியா தொடர்ந்து விரிவுபடுத்தி வருவது கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
