லண்டனில் பயங்கர தீ விபத்து: கட்டிடங்கள் இடிந்து சேதம், ரயில் போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் தவிப்பு
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யூனியன் ஸ்ட்ரீட் (Union Street) பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து, அந்நகரின் மிக முக்கியமான போக்குவரத்து மையமான கிளாஸ்கோ சென்ட்ரல் இரயில் நிலையத்தைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு வணிக வளாகத்தில் தொடங்கிய இந்தத் தீ, அடுத்த சில மணிநேரங்களில் அருகில் இருந்த நான்கு மாடிக் கட்டிடம் முழுவதும் பரவி ஒரு 'நெருப்புக் கோட்டை' போலக் காட்சியளித்தது. இந்தத் தீயின் தீவிரத்தால் 1851-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான விக்டோரியன் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 15 தீயணைப்பு வாகனங்கள் கடந்த 15 மணிநேரத்திற்கும் மேலாகத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். தீ விபத்து நடந்த கட்டிடம் இரயில் நிலையத்தின் நுழைவு வாயிலுக்கு மிக அருகாமையில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்காட்லாந்தின் பரபரப்பான கிளாஸ்கோ சென்ட்ரல் இரயில் நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் அருகிலுள்ள கிளைட் (River Clyde) நதியிலிருந்து தண்ணீரைப் பம்ப் செய்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து காரணமாக ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிளாஸ்கோ சென்ட்ரல் நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து இரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக வாரத் தொடக்கமான திங்கட்கிழமையன்று அலுவலகம் செல்பவர்கள் மற்றும் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை இரயில் நிலையம் திறக்கப்படாது என்றும், பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் நெட்வொர்க் ரயில் (Network Rail) நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தீ விபத்து நடந்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிளாஸ்கோ மாநகரின் மையப்பகுதியில் உள்ள பல சாலைகள் மூடப்பட்டுள்ளதால் நகரின் சாலைப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ஸ்காட்லாந்து முதல்வர் ஜான் ஸ்வினி (John Swinney) இந்த விபத்து குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, தீயணைப்பு வீரர்களின் அர்ப்பணிப்பான பணிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து மற்றும் புகையின் தாக்கம் காரணமாகத் தூய்மைப்படுத்தும் பணிகள் முடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: