ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அந்நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை முன்னின்று நடத்திய அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேல் நடத்திய துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார். டெஹ்ரானில் உள்ள அவரது ரகசிய மறைவிடத்தைக் குறிவைத்து நேற்றிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக உத்தரவிட்டுள்ளார். லாரிஜானியின் மரணத்தை உறுதிப்படுத்திய இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை, "அவர் ஏற்கனவே கொல்லப்பட்ட அலி கமேனியுடன் நரகத்தில் இணைவார்" என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.
அலி லாரிஜானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, டெஹ்ரான் வீதிகளில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பகிரங்கமாகத் தரைக்குறைவாக விமர்சித்திருந்தார். "ட்ரம்ப் ஒரு கோழை, அவர் ஈரானிய மக்களின் மன உறுதியை ஒருபோதும் உடைக்க முடியாது" என்று அவர் முழக்கமிட்ட வீடியோ வைரலானது. ட்ரம்ப்பைத் தொடர்ந்து வம்பிழுத்து வந்த லாரிஜானியின் இந்தச் செயல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத்துறையை அவர் மீது அதிகக் கவனம் செலுத்த வைத்தது. இறுதியில், அவர் தனது மகனுடன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் லாரிஜானியுடன் சேர்த்து, ஈரானின் பாசிஜ் (Basij) துணை ராணுவப் படையின் தளபதி ஜெனரல் கோலம்ரேசா சொலைமானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், போராட்டக்காரர்களை ஒடுக்குவதிலும் முக்கியப் பங்காற்றிய இவர்களின் இழப்பு, ஈரானிய ராணுவக் கட்டமைப்பிற்கு விழுந்த மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது. லாரிஜானி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், டெஹ்ரானின் சில பகுதிகளில் மக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடியதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பதில் நிலவிய இழுபறியைப் பயன்படுத்தி, லாரிஜானி ஒரு 'நிழல் தலைவராக' செயல்பட்டு வந்தார். தற்போது ஈரானின் முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராக இஸ்ரேலால் குறிவைத்துக் கொல்லப்பட்டு வருவது அந்நாட்டின் அதிகார மையத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. "நாங்கள் ஈரானின் பயங்கரவாத ஆட்சியை வேரோடு அழிப்போம்" என்று நெதன்யாகு சூளுரைத்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது.
