GO BACK

மத்திய கிழக்கு மோதல் – இலக்கு ஈரானா? இல்லை சீனாவா? சீனாவின் பாதுகாப்பு கேள்விக்குறி

 


மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்கள், வெறும் போர் நடவடிக்கையாக மட்டுமன்றி, சீனாவுக்கான எரிசக்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு ராஜதந்திர நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. ஈரானின் 90% கச்சா எண்ணெய் ஏற்றுமதி சீனாவிற்கே செல்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால், சீனா தனது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 15 சதவீதத்தை வழங்கும் இந்த மலிவு விலை எரிபொருள் ஆதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இதேபோன்றதொரு நடவடிக்கை முன்னதாக வெனிசுலாவிலும் அரங்கேறியதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலகின் மிகப்பெரிய எண்ணெய் கையிருப்பைக் கொண்ட வெனிசுலாவில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் காரணமாக, அங்கிருந்து சீனாவிற்கு கிடைத்து வந்த குறைந்த விலை எண்ணெய் விநியோகம் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இப்போது ஈரானும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதால், தடைகளுக்கு உட்பட்ட நாடுகளிடமிருந்து மலிவு விலையில் எண்ணெய் பெற்று தனது உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் சீனாவின் உத்தி இரண்டாவது முறையாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

ஹோர்மஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 13% வரை உயர்ந்துள்ளது. இது சீனாவின் உள்நாட்டுப் பணவீக்கத்தை அதிகரிப்பதுடன், அதன் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்தும் காரணியாகவும் மாறக்கூடும். ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து மாற்று வழிகளில் எண்ணெய் பெற சீனா முயன்றாலும், ஈரானிடமிருந்து கிடைத்த அளவிற்கு அதிகப்படியான தள்ளுபடி விலையில் எண்ணெய் கிடைப்பது கடினம் என எரிசக்தி வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான இந்தப் போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என அறிவித்துள்ள நிலையில், இது சீனாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ட்ரம்ப் - ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பிற்கு முன்னதாக, சீனாவைப் பேச்சுவார்த்தையில் பலவீனப்படுத்தும் நோக்கில் இந்த "எரிபொருள் நெருக்குதல்" (Energy Squeeze) பயன்படுத்தப்படுவதாகத் தொழில்நுட்ப மற்றும் புவிசார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.