GO BACK

ஈரான் போரால் உக்ரேனை கைவிட்ட அமெரிக்க: ஏவுகணைகள் கிடைக்காமல் தடுமாறும் உக்ரைன்

உக்ரைன் விமானப்படையிடம் உள்ள அதிநவீன எஃப்-16 (F-16) போர் விமானங்கள், அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணைகள் கிடைக்காத காரணத்தினால் கடந்த சில வாரங்களாகப் போர்க்களத்தில் முழுமையாகச் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் தீவிரமான வான்வழித் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் இந்த விமானங்களை பெரிதும் நம்பியிருந்த நிலையில், ஏவுகணை விநியோகத்தில் ஏற்பட்ட இந்தத் தட்டுப்பாடு உக்ரைனின் வான் பாதுகாப்பில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நவம்பர் இறுதி முதல் டிசம்பர் பாதியளவு வரை இந்த ஏவுகணைத் தட்டுப்பாடு நீடித்ததாகச் சமீபத்திய ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மூன்று முக்கிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்தத் தகவலின்படி, உக்ரைனின் எஃப்-16 விமானக் குழுவிடம் வெறும் கையில் எண்ணக்கூடிய அளவிலான 'ஏஐஎம்-9 சைடுவைண்டர்' (AIM-9 Sidewinder) ஏவுகணைகளே இருந்தன. ரஷ்யா தனது குளிர்கால வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டிருந்த அதே நேரத்தில், உக்ரைனின் நட்பு நாடுகளிடமிருந்து வர வேண்டிய ஏவுகணைகள் வந்து சேராததே இந்த நிலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனால், ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும் உக்ரைனின் திறன் கணிசமாகக் குறைந்துள்ளதோடு, பல நகரங்கள் மின்சாரம் மற்றும் வெப்ப வசதியின்றி முடங்கும் சூழல் ஏற்பட்டது.

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது போர் மூண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு முன்னுரிமைகள் மாறியுள்ளதும் உக்ரைனுக்கான இந்தத் தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் மற்றும் பிற வான் பாதுகாப்பு உபகரணங்கள் இப்போது வளைகுடா நாடுகளுக்குத் திருப்பி விடப்படுவதால், உக்ரைனுக்கு வழங்க வேண்டிய விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் பென்டகன் அதிகாரிகள் சூசகமாகத் தெரிவித்துள்ளனர். "எங்களால் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும்" என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் தனது எஃப்-16 விமானங்களை ரஷ்யாவிற்கு எதிரான தற்காப்பு அரணாக மாற்ற முயன்றாலும், போதுமான ஆயுதங்கள் இல்லாதது அதன் வீரியத்தைக் குறைத்துள்ளது. இருப்பினும், கடந்த டிசம்பர் மாத இறுதியில் மற்ற நட்பு நாடுகளிடமிருந்து சில ஏவுகணைகள் வந்தடைந்ததைத் தொடர்ந்து, உக்ரைன் ஒரு தற்காலிகமான தீர்வை எட்டியுள்ளது. ஆனாலும், நீண்ட கால அடிப்படையில் அமெரிக்காவின் நேரடி இராணுவ உதவி மற்றும் ஏவுகணை விநியோகம் சீராக இல்லாவிட்டால், ரஷ்யாவின் வான்வழி ஆதிக்கத்தை எதிர்கொள்வது உக்ரைனுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என இராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.