ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்கு ஆசிய நாடுகளில் தங்கியுள்ள தனது நாட்டு குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை 'டெபார்ட் நவ்' (DEPART NOW) என்ற அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இப்பகுதியில் நிலவும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, வணிக ரீதியிலான விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேறுவது பாதுகாப்பானது என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஈரான், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஜோர்டான், எகிப்து, லெபனான், ஈராக், சிரியா, ஓமன், ஏமன் மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 15 நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் எவ்வித காலதாமதமும் இன்றி வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கமாண்டர்கள் கொல்லப்பட்ட போதிலும், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்வதேச சமூகம் இரு தரப்பையும் அமைதி காக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையில், இராணுவ நடவடிக்கை மட்டுமே தீர்வு என்ற நிலைக்கு பிராந்தியம் தள்ளப்பட்டுள்ளது. இந்த மோதலின் தீவிரம் மற்றும் விளைவுகள் என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போர் சூழல் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
