Posted in

ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 51 இந்தியர்கள் பலி: வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தின் சார்பில் பணிபுரிவதற்காகச் சேர்க்கப்பட்ட இந்தியர்களில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்’ (SCO) உச்சி மாநாட்டின் போது செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இத்தகவலை வெளியிட்டார்.
இதுவரை ரஷ்ய ராணுவத்தில் 227 இந்தியர்கள் பணியாற்றச் சேர்க்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அவற்றில் 139 இந்தியர்கள் வெற்றிகரமாக ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் போர்க்கள மோதல்கள் மற்றும் தாக்குதல்களில் 51 இந்தியர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மோஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் ரஷ்ய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் ரஷ்ய ராணுவத்தில் எஞ்சியுள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்தியர்களையும் விரைவாக விடுவித்து, அவர்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கத் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறைச் செயலாளர் உறுதியளித்தார்.
முன்னதாக, சமையலர், உதவியாளர் மற்றும் கட்டிட வேலை போன்ற சிவில் பணிகளுக்கு ஆள்செர்ப்பதாகக் கூறி போலியான முகவர்களால் ஏமாற்றப்பட்டுப் பலர் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், போலி முகவர்கள் மற்றும் ஆபத்தான வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என இந்திய மத்திய அரசு நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.