சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் கொத்தாரா சசிகலா; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் சசிகலா சிறைவாசம் அனுபவித்த போது, அவருக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரம் குறித்த வழக்கு பதிவாகி 4 ஆண்டுகள் ஆகியும், இதுவரை கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலரான கீதா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியது தொடர்பாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

கர்நாடக ஐகோர்ட்

அந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இருந்தது. அந்த பொதுநல மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா மற்றும் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், கொரோனா காரணமாக இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தாமதமாகி உள்ளது. இதற்காக காலஅவகாசம் வேண்டும் என்று நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை இன்னும் 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Contact Us