தமிழகத்தின் தற்போதைய ஆட்சியைக் கடுமையாகச் சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியை ஒரு ‘சோஃபா மாடல்’ (Sofa Model) ஆட்சி என்று விமர்சித்துள்ளார். “முதலமைச்சர் ஒரு அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே அவரது சோஃபா அங்கு சென்றுவிடுகிறது, ஆனால் மக்கள் சந்திக்கும் உண்மையான சிக்கல்களைத் தீர்க்க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சரவையில் நிர்வாக அனுபவம் வாய்ந்தவர்களுக்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய நபர்களே அதிகளவில் இருப்பதாகத் தெரிவித்த அவர், இது ஒரு திறமையற்ற நிர்வாகம் என்றும் குறிப்பிட்டார்.
சட்டம், ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளில் தவெக அரசு ‘டீப் ஸ்லிப்’ (Deep Sleep) மோடிற்குச் சென்றுவிட்டதாகச் சாடியுள்ள உதயநிதி, தேர்தல் சமயத்தில் வீரவசனம் பேசிய முதலமைச்சர், பொறுப்பேற்ற பிறகு மௌனம் காப்பது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ‘சிங்கப்பெண்கள் படை’ தொடக்க விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது, ஆட்சியின் நிர்வாகக் குழப்பத்திற்குச் சிறந்த உதாரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சியாளர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயல்பாடுகளால், மக்கள் ஏற்கனவே தங்களது தேர்தல் முடிவை நினைத்து வருத்தப்படத் தொடங்கிவிட்டனர் என்று கூறிய அவர், விரைவில் மக்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறியும் காலம் வரும் என்று எச்சரித்தார். திமுக நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டது, தோல்விகளை விட வெற்றிகளைக் கண்டு பழகிய இயக்கம் என்றும், மக்கள் நலனுக்காக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய உதயநிதி, சமூக வலைதளங்களில் வெறும் காட்சிக்காக மட்டும் இயங்காமல், களத்தில் இறங்கிப் பணியாற்றி மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிர்வாகத்தில் நிலவும் குழப்பம் மற்றும் மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, மீண்டும் திமுகவை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டுவரத் தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.