Posted in

அம்மா உணவகத்தில் தட்டுப்பாடா? 30 நிமிடங்களில் 1200 இட்லிகள் காலியான மர்மம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், ஏழை எளிய மக்களுக்காகத் தயாரிக்கப்படும் இட்லிகள் முறைகேடாகத் தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மானியத்துடன் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் இந்த இட்லிகளை, உணவக ஊழியர்கள் அதிகாரிகளின் துணையுடன் மொத்தமாகத் தனியார் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்து லாபம் பார்ப்பதாக எழுந்திருக்கும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் காலையில் சுமார் 1,200 இட்லிகள் தயாரிக்கப்படும் நிலையில், உணவகம் திறக்கப்பட்ட அரை மணி நேரத்திலேயே (காலை 7:30 மணிக்குள்) “இட்லி தீர்ந்துவிட்டது” என்று ஊழியர்கள் வாடிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புகின்றனர். ஆனால், அதே நேரத்தில் பின்புற வழியாகத் தனியார் ஹோட்டல் நடத்துபவர்களுக்கு 60 முதல் 80 இட்லிகள் வரை மொத்தமாகப் பார்சல் கட்டிக் கொடுக்கப்படுவதாகப் பொதுமக்கள் நேரில் கண்டு ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர். ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் இந்த இட்லிகள், வெளியே உள்ள ஹோட்டல்களில் 5 முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவதால், அரசு வழங்கும் மானியத்தை உணவக ஊழியர்களும் ஹோட்டல் உரிமையாளர்களும் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர்.

அம்மா உணவகத்தில் பார்சல் வழங்கக் கூடாது என்பது விதியாகும்; ஆனால், விதிகளையும் மீறிப் பிளாஸ்டிக் கவர்களில் வைத்து மொத்தமாகப் பார்சல் விநியோகம் செய்யப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் பசியோடு உணவகத்திற்கு வந்தால், அவர்களுக்கு உணவு மறுக்கப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது. இது குறித்துக் கேள்வி எழுப்பும் பொதுமக்களிடம், “மேலிட அதிகாரிகள் சொல்லித்தான் நாங்கள் கொடுக்கிறோம்” என்று ஊழியர்கள் அலட்சியமாகப் பதிலளிப்பது, இந்த முறைகேட்டில் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதையே உறுதிப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏழை மக்களின் பசியைப் போக்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் நடக்கும் இந்த ஊழலைத் தடுக்க, நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. முறைகேடாக இட்லி விற்பனை செய்யும் ஊழியர்கள் மற்றும் இதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் பதிவேடுகள் மூலம் உணவகத்தின் விற்பனையை வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.