டெல்லியில் அண்மையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மையக்குழுக் கூட்டம், மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் (Nitin Nabin) ஆகியோர் முன்னிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் தமிழக நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து டெல்லி தலைமை கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தின் தொடக்கத்திலேயே, அண்மையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) என்ற புதிய அமைப்பைத் தொடங்கிய முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையைப் பற்றி தமிழகத் தலைவர்கள் தொடர்ந்து பொதுவெளியில் விமர்சித்து வருவதற்கு அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அண்ணாமலை நேற்று வரை நம்மோடு பயணித்தவர் தான். அவரை நீங்கள் விமர்சிப்பது உங்களையே நீங்கள் விமர்சித்துக் கொள்வதற்குச் சமம். கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் கவனம் செலுத்தாமல், தனிநபர்களை விமர்சிக்கும் அரசியலை எத்தனை நாட்களுக்குச் செய்யப் போகிறீர்கள்?” என்று அமித்ஷா குரலை உயர்த்தி எச்சரித்ததால் அவையில் இருந்த தலைவர்கள் அனைவரும் அமைதியாகியுள்ளனர். தொடர்ந்து பேசிய அமித்ஷா, அண்ணாமலைக்குத் தமிழகத்தில் தனிப்பட்ட முறையில் கணிசமான செல்வாக்கு இருந்தாலும், பாஜக போன்ற பலமானதொரு கட்டமைப்பு அவரிடம் கிடையாது என்றும், தனி மனிதனை விட எப்போதும் அமைப்பே பெரியது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மந்தமான செயல்பாடுகள் குறித்து டெல்லி தலைமைக்குத் தீவிர அதிருப்தி நிலவுவது இக்கூட்டத்தில் வெளிப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழக பாஜகவை மக்கள் மத்தியில் ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் வலுவான எதிர்க்கட்சியாக மாற்றிக் காட்ட வேண்டும் என்றும், கட்சியின் நற்பெயரை மக்களிடம் உயர்த்த வேண்டும் என்றும் டெல்லி தலைமை மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையையும் (Ultimatum) காலக்கெடுவையும் விதித்துள்ளது.
இந்த 3 மாதக் கெடுவுக்குள் எதிர்பார்த்த அளவிற்குக் கட்சி வளர்ச்சி அடையவில்லை என்றால், நயினார் நாகேந்திரனின் மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் முணுமுனுக்கின்றன. டெல்லி தலைமையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே, தமிழ்நாட்டில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு எதிராகத் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ளும் நோக்கில், அடுத்தடுத்த போராட்டங்களை அரங்கேற்ற தமிழக பாஜக தற்போது அவசர அவசரமாகத் திட்டமிட்டு வருகிறது.