தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு பொறுப்பேற்ற 30 முதல் 40 நாட்களுக்குள்ளேயே, கடந்த 15 ஆண்டுகளாகத் தனியார் பள்ளி நிர்வாகங்களை உலுக்கி வந்த இமாலய லஞ்ச முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கல்வித்துறையில் மாபெரும் புரட்சிகரமான சீர்திருத்தம் (Big Reform) செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான ‘மூன்று ஆண்டுக்கு ஒருமுறை’ வழங்கப்படும் புதுப்பித்தல் சான்றிதழ் (Renewal Certificate) மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தடையில்லா சான்றிதழ் (NOC) போன்றவற்றுக்கு இனி ஒரு பைசா கூட லஞ்சம் தர வேண்டியதில்லை என்ற தவெக அரசின் அதிரடி நடவடிக்கையைத் தனியார் பள்ளி தாளாளர்கள் சங்கம் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களுக்குப் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ள ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் நலச்சங்கத்தின்’ மாநிலப் பொதுச் செயலாளர் என்.எஸ். குடியரசு மற்றும் தலைமை நிலையச் செயலாளர் எம். வெங்கடாச்சலம் ஆகியோர் கடந்த கால துயரங்களை உடைத்துப் பேசியுள்ளனர். “கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட முந்தைய இரண்டு ஆட்சிகளிலும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரப் புதுப்பித்தலுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (Per Student Count) இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டிய கொடூரமான நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டோம். பில்டிங் லைசென்ஸ், ஃபயர் சேஃப்டி, சானிட்டரி சர்டிபிகேட் என எல்லாம் சரியாக இருந்தாலும், 20-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் துறையின் உயரதிகாரிகள், அமைச்சரின் உதவியாளர்கள் மூலம் ஃபைல்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டு லஞ்சம் வசூலிக்கப்பட்டது” என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் பேசுகையில், “பள்ளிகளுக்கான புதுப்பித்தல் சான்றிதழ் சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால் மாணவர்களின் ஸ்காலர்ஷிப் தடைபடும், பள்ளி வாகனங்களுக்கு எஃப்சி (FC) எடுக்க முடியாது, வங்கி கடன் பெற முடியாது என்பதால் வேறு வழியின்றி தாளாளர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. கடந்த 2022-ல் நாங்கள் சங்கம் ஆரம்பித்து, லஞ்சத்திற்கு எதிராகத் துணிச்சலாக நீதிமன்றம் செல்லவும் முடிவெடுத்தோம். இந்தச் சூழலில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றது. நாங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட புதிய கல்வி அமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உடனடியாகப் புரிந்துகொண்ட புதிய அரசு, சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே, மண்டல வாரியாக அலைக்கழிக்காமல் ஒரே இடத்தில் எங்கள் அனைவருக்கும் எவ்வித கட்டணமும் இன்றி, ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவசமாகப் புதுப்பித்தல் ஆணைகளை வழங்கியுள்ளது” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டனர்.
தவெக அரசின் இந்த ‘ஜீரோ கமிஷன்’ வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகத்தால் தனியார் பள்ளிகளுக்குப் பல லட்ச ரூபாய் நிதிச்சுமை பெருமளவில் குறைந்துள்ளது. இதற்குப் பிரதிபலனாக, கல்வி அமைச்சர் மேடையிலேயே விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக அரசின் கல்விச் சீர்திருத்தத்திற்குத் தாளாளர் சங்கம் முழு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி, ஏழை மாணவர்களுக்கான ஆர்டிஇ (RTE – Right to Education) சட்டத்தை 100% முழுமையாக அமல்படுத்துவதுடன், கட்டண விவரங்களை நோட்டீஸ் போர்டில் ஒட்டியுள்ளனர். மேலும், இந்த நிதிச் சேமிப்பைக் கொண்டு கிராமப்புறப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 75% கிராமப்புறத் தனியார் பள்ளிகள், பெற்றோர்களுக்குச் சுமை ஏற்படாதவாறு இந்த ஆண்டு 10 முதல் 15 விழுக்காடு வரையான கட்டண உயர்வைச் சுயவிருப்பத்துடன் (Voluntarily) வேண்டாம் என எழுதித் தந்துள்ளதாக அறிவித்துள்ளது தவெக அரசின் 30 நாள் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.