Posted in

காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்! 1,700க்கும் மேற்பட்டோர் பலி – உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை!

கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வரும் சூழலில், இதுவரை 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அண்மைத் தகவலின்படி, மொத்தம் 3,802 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,707 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பதிவான எபோலா பரவல்களிலேயே மிகவும் அதிவேகமாகப் பரவும் நோய்த்தொற்றாக இது மாறியுள்ளது மருத்துவ உலகைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த எபோலா பரவலுக்கு ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகை வைரஸ் காரணமாகும். பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் ‘ஜைர்’ (Zaire) வகை வைரஸுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், ‘புண்டிபுக்யோ’ வைரஸுக்குப் போதிய தடுப்பூசிகளோ மருத்துவச் சிகிச்சைகளோ உடனடியாகக் கிடைக்காதது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தினர் இடூரி (Ituri) மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு காங்கோவில் நிலவும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் வன்முறை, பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிவதில் உள்ள தாமதம் மற்றும் உள்ளூர் சமூகத்தினரிடையே நிலவும் அச்சம் ஆகியவை நோய் தடுப்புப் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. மேலும், புதிதாக உறுதி செய்யப்படும் வழக்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை நேரடித் தொடர்புகள் மூலம் அல்லாமல், சமூகப் பரவல் மூலமே ஏற்படுவதாக ஆப்பிரிக்க நோய் தடுப்பு மையம் (Africa CDC) கவலை தெரிவிப்ப தோடு, சம்பள நிலுவை காரணமாக உள்ளூர் மருத்துவப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டங்களும் நிலைமையை மோசமாக்கியுள்ளன.

நோய்த்தொற்றின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் மற்றும் ஆப்பிரிக்க சிடிசி தலைவர் டாக்டர் ஜான் கசேயா ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது புதிய தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கான இரண்டு கட்ட மருத்துவ ஆய்வுகள் இடூரி மாகாணத்தில் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேசச் சமூகம் உடனடியாக நிதி உதவி மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.